ரூ.8 கோடி மென்பொருள் வீண்; கியூ.ஆர்., முறையில் டிக்கெட் பெற வசதி; செலவை ஏற்க துறைகள் தயக்கம்

சென்னை: சென்னை மாநகரில், பஸ், மெட்ரோ, ரயில் சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிக்கெட்டை, கியூ.ஆர்., குறியீடு முறையில் வழங்குவதில் ஏற்படும் கூடுதல் செலவை ஏற்பது யார் என, துறைகளிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தால், 8 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில், மாநகர பஸ், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் மின்சார ரயில் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு சேவைக்கும், ஒவ்வொரு விதமான கட்டணம் உள்ளதால், ஒருங்கிணைந்த வழிமுறையை ஏற்படுத்த முடியாத நிலை தொடர்ந்தது. இதனால், இந்த சேவைகளை பயன்படுத்துவோர் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
இதை கருத்தில் வைத்து, 'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம் வாயிலாக, ஒருங்கிணைந்த முறையில், பஸ், மெட்ரோ, ரயில் சேவைகளுக்கான, கியூ.ஆர்., குறியீடு வாயிலாக டிக்கெட் பெறும் முறையை உருவாக்கும் திட்டத்திற்கு, 2023 - 24ல், 15 கோடி ரூபாயை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை ஒதுக்கியது.
இதையடுத்து, கும்டா அதிகாரிகள், இதற்கான பூர்வாங்க பணிகளை துவக்கினர். 'மூவிங் டெக் இன்னோவேஷன்'ஸ் என்ற நிறுவனம் வாயிலாக இதற்கான புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையில், பொதுமக்கள் மொபைல் போன் செயலியை பயன்படுத்தி, கியூ.ஆர்., குறியீடு முறையில் டிக்கெட் பெறலாம்.
மென்பொருள் தயாரிப்பு முடிந்து சோதனை ஓட்டம் நடந்து வருவதாகவும், ஆகஸ்ட் முதல் வாரம் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
கூடுதல் செலவை யார் ஏற்பது?
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல்வேறு திட்டங்கள் குறித்து சமீபத்தில், தலைமை செயலர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அப்போது, கியூ.ஆர்., குறியீட்டு முறையில் டிக்கெட் வழங்குவதற்கான மொபைல் போன் செயலியை, அரசு மற்றும் தனியார் பங்கேற்பில் பராமரிக்க தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
டிக்கெட் கட்டணத்துடன், 1.39 சதவீத தொகையை கூடுதலாக வசூலிக்க வலியுறுத்தப்பட்டது. வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கும், செயலியில் வரும் கட்டணத்துக்கும் வேறுபாடு இருந்தால் குழப்பம் ஏற்படும் என, மாநகர் போக்குவரத்து கழகம், மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே போன்றவை தெரிவித்தன.
அதேநேரம், கூடுதல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதை, நிதித்துறை ஏற்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில், தெளிவான முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கியூ.ஆர்., முறையில் டிக்கெட் வழங்குவதற்காக, 8 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சலுகை தரலாம்; சுமை கூடாது
நேரடியாக பணம் கொடுத்து வாங்கும் கட்டணத்திற்கும், ஒருங்கிணைந்த டிக்கெட் முறை கட்டணத்திற்கும் வேறுபாடு இருப்பது, பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். தற்போது, மெட்ரோ ரயில் பயணியர், 'சிங்கார சென்னை' என்ற அட்டையை பயன்படுத்தும் போது கட்டணத்தில், 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதே அட்டையை பயன்படுத்தி கூடுதல் செலவின்றி, மாநகர பஸ்களிலும் பயணச்சீட்டு பெற முடிகிறது. இந்தச் சூழலில், கியூ.ஆர்., டிக்கெட்டிற்கான மென்பொருள் சேவையை அமல்படுத்தும் போது, மக்களுக்கு சலுகை தரலாம்; கூடுதல் செலவும் ஏற்படக்கூடாது. இதில், ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.- நகரமைப்பு வல்லுநர்கள்.