சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயலும் இந்தியா

சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயலும் இந்தியா
வேகமாக மாறி வரும் புவிசார் அரசியல், உறவுகளை மீட்டெடுப்பதற்காக சீனாவை அணுக வேண்டிய கட்டாயத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்

பல ஆண்டுகளாக எல்லையில் நிலவிய பதற்றங்களுக்குப் பிறகு, இந்தியாவும் சீனாவும் மெதுவாக உறவுகளை மீட்டெடுக்க முயல்வது போலத் தெரிகிறது. ஆனால், இதில் இன்னும் பெரிய சவால்களும் சந்தேகங்களும் உள்ளன.

கடந்த மாத இறுதியில், இரண்டு மூத்த இந்திய அதிகாரிகள் சீனா சென்றது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் அறிகுறியாகக் கருதப்பட்டது.

ஜூன் மாதத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டங்களுக்காக தனித்தனியாக சீனா சென்றனர்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பது சீனா, ரஷ்யா, இரான், பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகளைக் கொண்ட யூரேசிய பாதுகாப்பு அமைப்பு. ராஜ்நாத் சிங்கின் பயணம்தான், ஐந்து ஆண்டுகளில் ஒரு மூத்த இந்திய அதிகாரியின் முதல் சீனப் பயணம்.

இந்தியா-சீனா பதற்றத்தின் மையத்தில் 3,440 கிமீ (2,100 மைல்) நீளமுள்ள, தெளிவாக வரையறுக்கப்படாத எல்லை உள்ளது. எல்லையில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் பனி மூடிய பகுதிகள் காரணமாக எல்லைக் கோடு அடிக்கடி மாறுகிறது. இதனால், பல இடங்களில் இரு நாட்டு வீரர்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர், சில நேரங்களில் சிறிய மோதல்களும் ஏற்படுகின்றன.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூனில், லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டுப் படைகளும் மோதியபோது பதற்றம் அதிகரித்தது. 1975ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்ட இந்த மோதலில், குறைந்தது 20 இந்திய வீரர்களும் 4 சீன வீரர்களும் உயிரிழந்தனர். அதன் பிறகு, பல இடங்களில் இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே மோதல்கள் நடந்துள்ளன.

கடந்த ஜூலை 7ஆம் தேதி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டின்போது, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீனப் பிரதமர் லி கியாங்

ஆனால், உலக அரசியலில் நிலவும் நிச்சயமற்ற சூழலும், கள நிலைமைகளும் இரு தரப்பையும் சில பிரச்னைகளில் ஒரு பொதுவான தீர்வை எட்ட வைத்துள்ளன. கடந்த ஆண்டு இறுதியில், லடாக்கில் உள்ள முக்கிய மோதல் பகுதிகள் குறித்து இரு நாடுகளும் ஓர் ஒப்பந்தத்தை எட்டின.

ஜனவரியில், 2020 மோதலுக்குப் பிறகு நிறுத்தப்பட்ட நேரடி விமானங்களை மீண்டும் தொடங்கவும், விசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் இந்தியாவும் சீனாவும் உடன்பட்டன. அதே மாதத்தில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய யாத்ரீகர்கள் திபெத்தில் உள்ள புனித கைலாஷ் மலை மற்றும் ஒரு புனித ஏரியைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், இன்னும் சில தடைகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனா, இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது. கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 127 பில்லியன் டாலர்களை தாண்டியது. இந்தியா, குறிப்பாக அரிய மண் தாதுக்களுக்கு சீன இறக்குமதியைப் பெரிதும் நம்பியுள்ளது. எனவே, பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டுமெனில் எல்லைப் பகுதிகளில் அமைதி மிக முக்கியம்.