குறைக்கப்படும் ரெப்போ விகிதம்... கடன் பெற்றோருக்கு நற்செய்தி..!

குறைக்கப்படும் ரெப்போ விகிதம்... கடன் பெற்றோருக்கு நற்செய்தி..!
ரெப்போ விகிதம் மீண்டும் குறைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிருப்பதைப் பற்றி...

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனின் அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதம் கணக்கிடப்படுகிறது. ரிசர்வ் வங்கியில் ரெப்போ விகிதம் குறைக்கப்படும்போது நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வீடு, கார் உள்ளிட்ட கடன் பெற்றவர்களுக்கான வட்டி விகிதம் குறைப்படுகிறது. இதனால், கடன் தொகை அல்லது கடனுக்கான தவணை குறைகிறது.

அந்த வகையில், பணவீக்கத்தின் அடிப்படையில் நிகழாண்டில் ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (1 சதவிகிதம்) வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. தற்போதைய வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக இருக்கிறது. இந்த ரெப்போ விகிதத்தை மேலும், 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கடந்த முறை நடைபெற்ற நிதி கொள்கைக் கூட்டத்தில், மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக நிகழாண்டில் 4.6 சதவிகிதமாக இருக்கும் பணவீக்கம், 2026 நிதியாண்டிற்கான சராசரி 3 முதல் 3.2 சதவிகிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவீக்கம் சாதகமாக இருப்பதால், மத்திய வங்கி விரைவில் ரெப்போ விகிதத்தை மேலும் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நிதி கொள்கைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ரெப்போ விகிதம் குறைப்பதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியான செய்தி யாருக்கு?

இந்த ஆண்டு வீட்டுக் கடன் வாங்கியவர்கள், ஏற்கனவே ரெப்போ விகிதக் குறைப்புகளால் பயனடைந்துள்ளனர். ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டதன் விளைவாக, பல வங்கிகள் இப்போது 8 சதவிகிதத்துக்கும் குறைவான வட்டி விகிதங்களில் வீட்டுக் கடன்களை வழங்கி வருகின்றன. ஏற்ற இறக்க வட்டி விகிதத்தில் (ஃப்ளோட்டிங் இன்ட்ரஸ்ட்) வீடு, கார் வாங்கியவர்களுக்கும் இது மகிழ்ச்சியான செய்தியாகவே அமைந்திருக்கிறது.