முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!
ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகள் முன்னிலையில் இன்று மாநாடு நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மதுரை அருகே மாநாடு நடைபெறும் திடலுக்கு மாடுகள் கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன

நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக, "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், இன்று மதுரை விராதனூர் பகுதியில் ஆடு, மாடுகளின் மாநாடு நடைபெறுகிறது

தமிழ்நாட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதனால், கால்நடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

கால்நடைகள் வனப் பகுதிகளுக்குள் சென்று மேய்ச்சல் செய்வதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று இந்த விழிப்புணர்வு மாநாட்டை நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த மாநாட்டு பணிகளை உழவர் பாசறை தலைவர் செங்கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

இயற்கை விவசாயம், ஆடு மாடு வளர்ப்பு, தற்சார்பு பொருளாதாரம், கள் இறக்கும் உரிமை உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் சீமான். அண்மையில் பனைமரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார் சீமான். இந்நிலையில், முதல்முறையாக ஆடு, மாடுகளுக்கான மாநாடு இன்று நடத்தப்படுகிறது

.மதுரை விராதனூர் பகுதியில் நடு முள் காட்டுப் பகுதி அருகே, நாட்டு வகை கிடை மாடுகள் மற்றும் ஆடுகளை திடலில் நிறுத்தி, அதற்கு முன்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு பிரத்யேக பட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் மாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்னிலையில், மேடையில் நின்று பேச இருக்கிறார் சீமான்.

ஆடு, மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் இன்றைய தினம் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சீமான் பேசுவது எல்.இ.டி திரைகளிலும் ஒளிபரப்ப்பட உள்ளது. முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தப்படுவது கவனம் பெற்றுள்ளது

.