அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை: அரியலூரில் இ.பி.எஸ் அறிவிப்பு

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை: அரியலூரில் இ.பி.எஸ் அறிவிப்பு
"அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்." என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அரியலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமி, காமராஜரின் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதனைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டம விவசாய சங்க பிரதிநிதிகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கையை கேட்டறிந்தார். அப்போது, ‘கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். நெல், கரும்பு, முந்திரிக்கு உரிய விலை நிர்ணயித்து விவசாயத்தை காக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

பின்னர் விவசாயிகளின் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “தமிழகத்தில் 2 முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்த பெருமை அ.தி.மு.க-வைச் சேரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் ஒரு முறையும், எனது ஆட்சி காலத்தில் ஒரு முறையும் என இரு முறை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.

குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் சுமார் 14,000 ஏரிகள் தூர்வாரப்பட்டன. இதனால் மழைநீர் முழுவதும் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்றனர். இந்த ஏரிகளிலிருந்து எடுக்கப்பட்ட வண்டல் மண் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதால் விவசாய நிலங்கள் ஊட்டச்சத்து பெற்று விவசாயம் பன்மடங்கு பெருகியது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் கொள்ளிட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

எனது ஆட்சி காலத்தில் சுமார் 1,000 ஏக்கரில் சேலத்தில் உருவாக்கப்பட்ட கால்நடை பண்ணையை திமுக அரசு மூடிவிட்டது. இது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. உங்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த கால்நடை பண்ணை மீண்டும் செயல்படுத்தப்பட்டு இங்கு உருவாக்கப்படும் சிறந்த கலப்பின பசுக்கள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். இதன்மூலம் விவசாயிகள் வளர்ச்சி அடைவார்கள்.

தி.மு.க அரசு எத்தனை தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்கள். அறிவித்தபடி கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500 தரவில்லை. பலமுறை சட்டப்பேரவையில் நான் கோரிக்கை வைத்தும், திமுக அரசு வழங்கவில்லை. உங்களின் ஆதரவுடன் அ.தி.மு.க அரசு அமைந்த உடன் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விவசாயிகளுடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் வழங்கிய தானியத்திலான பூங்கொத்துகளையும், விவசாயிகள் அளித்த மனுக்களையும் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அரசு தலைமைக் கொறடாவும், மாவட்டச் செயலாளருமான தாமரை எஸ்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், ப.இளவழகன், இளம்பை தமிழ்ச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.