காங்கிரஸ் எத்தனை தொகுதிகளை கேட்கும்? - செல்வப்பெருந்தகை பேச்சு

தமிழ்நாட்டில் பாஜக அமைத்துள்ள பொருந்தா கூட்டணியை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சுரண்டையில் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தப் பணி கூட்டம் மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “கிராம கமிட்டி அமைக்கும் பணிகள் 72 சதவீதம் அளவுக்கு முடிவடைந்துள்ளது. எஞ்சிய 28 சதவீத பணிகளை ஓரிரு மாதங்களில் முடியும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் மக்கள் ஏற்றுக்கொள்ளாத, பொருத்தமில்லாத, இயற்கைக்கு எதிரான கூட்டணியை பாஜக அமைத்துள்ளது. அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசியவர்கள் பாஜக தலைவர்கள். எனவே, பாஜக கூட்டணிக்கு தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்து அகில இந்திய தலைமை முடிவு செய்யும்." என்று கூறினார்.