லட்டு மாதிரி சான்ஸ்.. ஜூலை 15ல் வாழ்க்கையே மாறலாம்! வெளியான அதிரடி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் ஜூலை 15-ம் தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ள நிலையில், "உங்களுடன் ஸ்டாலின்" குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை முலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," I.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் " புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்" (நீட்ஸ்) மாவட்ட தொழில் மையம் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற பொதுப் பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு 21 வயது முதல் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்க வயது வரம்பு உள்ளது. பயனாளிகள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
மேலும், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில் துவங்க ரூ.10 இலட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படும். அனைத்து பயனாளிகளுக்கும் 25 சதவிகிதம் அதிகபட்சமாக ரூ.75.00 இலட்சம் வரை மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம், கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (AABCS): தமிழ்நாடு அரசு சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" (AABCS), இயங்கி வரும் தொழில்களை விரிவாக்கம் செய்திடவும் தொழில் முனைவோர்கள் உருவாகவும் சிறப்பு திட்டமாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி ஏதுமில்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே துவங்கப்பட்ட நிறுவனம் தனது விரிவாக்கத்திற்கும் மற்றும் புதிதாக துவங்கவிருக்கும் நிறுவனமும் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதிபெற்றதாகிறது. மேலும், தனி நபர் நிறுவனம், பங்குதாரர் நிறுவனம் மற்றும் பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆகிய அனைத்து வகை தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன்பெறத் தகுதி வாய்ந்தது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற இயலும்
நேரடி வேளாண்மை, கனரக வாகனங்கள், நில அகழ்வு இயந்திரங்கள் நீங்கலாக வணிகம், சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த பொருளாதார ரீதியான சாத்தியப்படக்கூடிய தொழில் துவங்க, வாடகைக்கு விடப்படும் பயண வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான வாகனங்கள் கொள்முதல் செய்திடவும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட ஒப்புதல் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்ச மானியம் ரூ.1.00 கோடி, சேவைத் தொழிலுக்கு அதிகபட்ச மானியம் ரூ.0.75 கோடி மற்றும் வியாபாரத் தொழிலுக்கு அதிகபட்ச மானியம் ரூ.0.50 கோடி வழங்கப்படுகிறது. மொத்த திட்ட மதிப்பீட்டில் 65 சதவிகிதம் கடனுதவியாகவும், 35 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படும். மேலும், கடனை சரியாக உரிய காலத்தில் திருப்பி செலுத்தும் விண்ணப்பதார்களுக்கு கடனை திருப்பி செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவிகிதம் வட்டி மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி, திட்டம் தொடர்பான சிறப்பு பயிற்சி அல்லது திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் இலவசமாக வழங்கப்படும்
கலைஞர் கைவினைத் திட்டம்: தமிழ்நாடு அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் "கலைஞர் கைவினைத் திட்டம் (KKT)" என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி, அரசு ஆணை எண். 64, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நாள்: 06.12.2024-இல் வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவியும் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும் என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் ரூ.3,00,000 வரை வங்கி கடன் உதவியும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படும்.
கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை பின்னுதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள், சுடு மண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினைத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில்களாக அறிவிக்கப்பட்டுள்ளது
.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்: தமிழ்நாடு அரசால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற படித்த இளைஞர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியேலேயே சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞயர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மாவட்ட தொழில் மையம், திண்டுக்கல் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ரூ.15.00 இலட்சம், 25 சதவீதம் அரசு மானியத்துடன் கடன் பெற பரிந்துரைக்கப்படும். அதற்கான அதிகபட்ச மானியத் தொகை ரூ.3.75 இலட்சம் ஆகும். தொழில் தொடங்க ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 45 வயது வரையும் சிறப்புப் பிரிவினராக பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகிய பிரிவினர் 55 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் செய்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு, திட்ட மதிப்பீட்டில் 90 சதவீதம் முதல் 95 சதவீதம் வரை வங்கிக்கடன் வழங்க பரிந்துரை செய்யப்படும். திட்ட முதலீட்டில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை விண்ணப்பதாரர்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயனடைய அல்லது இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல் அவர்களை நேரிலோ அல்லது 0451-2904215, 2471609 மற்றும் 8925533943 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.