இன்றைய இலக்கியம்

நாலடியார் - பொருட்பால் நட்பியல்
சுற்றம் தழால் -அதிகாரம்
பாடல் எண் :201
"வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும்
கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு
அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன்
கேளிரைக் காணக் கெடும்."
-சமண முனிவர்கள்
பொருளுரை:
கருக்கொண்ட காலத்து உண்டாகும் மசக்கையாகிய நோயும், அது பற்றி வரும் பல துன்பங்களும், குழந்தை பெறுங்காலத்து உண்டாகும் நோவும், ஆகிய இத்தகைய துன்பங்களையெல்லாம் மடியில் இருக்கும் குழந்தையைக் கண்டு தாய் மறப்பதுபோல், தளர்ச்சியால் தான் உற்ற துன்பம் எல்லாம் நலம் விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும்.