ரேஷன் கடைகளில் வந்த 5 மிகப்பெரிய மாற்றங்கள் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

ரேஷன் கடைகளில் வந்த 5 மிகப்பெரிய மாற்றங்கள் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
ரேஷன் கடைகளில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருக்கும் மிக முக்கிய மாற்றங்களை உணவுப்பொருள் வழஙல்துறை பட்டியலிட்டுள்ளது

Ration Card Latest Update : தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல்துறை மூலம் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகள் பொதுமக்களுக்கு மிக எளிமையாக கிடைக்கும் வகையில் அனைத்து சேவைகளையும் எளிமைப்படுத்தியுள்ளது. புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து தங்களுக்கான கோரிக்கைகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும். இதுதவிர இன்னும் சில மாற்றங்களையும் அரசு செய்திருக்கிறது. அந்தவகையில், ரேஷன் கார்டு வைத்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது...

அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் வகையில் ரேஷன் கடைகளில் 5 முக்கிய மாற்றங்களை தமிழ்நாடு அரசு செய்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரும் இந்த முக்கிய மாற்றங்களை தெரிந்து கொள்ள வேண்டும். உணவுப்பொருள் வழங்கல்துறை வெளியிட்டுள்ள விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனையின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு. கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் UPI முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டார்கள். இதுவரை. 10,661 நியாய விலைக் கடைகளில் UPI முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை நடைபெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வழியாக ரேஷன் கடைகளில் பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

நியாயவிலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை

கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டுவரும் நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை செய்ய ஆணையிடப்பட்டு, 2021 அக்டோபர் முதல் 2025 மார்ச் வரை ரூ.1.93 கோடி மதிப்பிலான பனை வெல்லம் நியாய விலைக் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்பட்டு மக்கள் பயன் அடைந்தனர். மக்களிடம் சத்து மிகுந்த கம்பு. கேழ்வரகு. சோளம் முதலிய சிறுதானியங்களின் பயன்பாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்களை விற்பனை செய்திட முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதன் பயனாக, நியாயவிலைக் கடைகளில் 2022 ஜூன் முதல் 2025 மார்ச் வரை ரூ.2.58 கோடி மதிப்பிலான சிறுதானியங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன இத்திட்டம் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது..

நியாயவிலைக் கடைகளுக்கு ISO தரச்சான்றிதழ்

தமிழ்நாடு முதலமைச்சர், நியாயவிலைக் கடைகளில் பொருள்களைத் தரமாக வழங்கிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனால் நியாயவிலைக் கடைகளில் முழுமையான தர மேலாண்மையை உறுதி செய்வதற்காகக், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளுக்கு 2023 ஆம் ஆண்டு முதல் ISO தரச்சான்றிதழ் பெறப்பட்டு வருகிறது. இதுவரை, தரம் மற்றும் பராமரிப்புக்காக 10.149 நியாய விலைக் கடைகளுக்கு ISO:9001 சான்றிதழும், பாதுகாப்பான உணவுச் சங்கிலி மற்றும் சேமிப்பிற்கான, 2,059 நியாய விலைக் கடைகளுக்கு ISO:28000 சான்றிதழும் பெறப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக் கடைகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி பொலிவுறச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 5,481 நியாயவிலைக் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவு துறையின் கீழ் 35,181 நியாயவிலைக்கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் 1527 நியாயவிலைக்கடைகளும், இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 152 நியாயவிலைக்கடைகளும், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 468 நியாயவிலைக்கடைகளும், என மொத்தம் 37,328 நியாயவிலைக்கடைகள் தமிழ்நாடு முழுவதிலும் செயல்படுகின்றன. இவற்றுள் 26,618 நியாயவிலைக்கடைகள், முழுநேரமும் செயல்படுகின்றன. 10.710 நியாயவிலைக்கடைகள், பகுதி நேரக் கடைகளாகச் செயல்படுகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் வாயிலாக மொத்தம் 2 கோடியே 25 இலட்சத்து 93 ஆயிரத்து 654 மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

இவற்றுள் 21,337 நியாயவிலைக்கடைகள், சொந்தக் கட்டடங்களிலும் 8,725 நியாயவிலைக்கடைகள் வாடகையில்லாக் கட்டடங்களிலும் 7,266 நியாயவிலைக்கடைகள் வாடகைக் கட்டடங்களிலும் செயல்படுகின்றன. தனியார் வாடகை கட்டடங்களில் செயல்படும் நியாயவிலைக்கடைகளுக்குச் சொந்தக் கட்டிடங்கள் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

2394 புதிய நியாயவிலைக் கடைகள்

பொதுமக்கள் எளிதாகக் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்கிப் பயன்படுத்திட வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். அதனால் அவர்கள் வசிக்கும் இடங்களின் அருகிலேயே பொது விநியோகக் கடைகள் அமைய வேண்டும் என்பதற்காக 4 ஆண்டுகளில் மக்கள் வாழும் பகுதிகளில் 789 முழு நேரக் கடைகளும், 1605 பகுதி நேரக் கடைகளும், ஆக மொத்தம் 2394 புதிய நியாயவிலைக் கடைகளைத் திறக்கப்பட்டுள்ளது என உணவுப்பொருள் வழங்கல்துறை இந்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது..