ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையில் போலி; 10 லட்சம் பேர் நீக்கப்பட்டதாக சர்ச்சை!

மதுரை: தி.மு.க.,வின் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற உறுப்பினர் சேர்க்கையில் 10 லட்சம் உறுப்பினர்கள் நீக்கப்பட்டு மீண்டும் சரிபார்த்து பதிவிடும் வகையில் செயலியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கட்சியினரை சோர்வடைய செய்துள்ளது.
மதுரையில் நடந்த தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் 'சட்டசபை தேர்தலுக்குள் ஒரு ஓட்டுச் சாவடிக்கு 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்' என கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி 2 கோடிக்கும் மேல் புதிய உறுப்பினர்களை சேர்த்து அதில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவும் தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை ஜூலை 1ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., சீட், பதவி கனவில் உள்ள மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய செயலாளர்கள் என ஒட்டுமொத்த கட்சி நிர்வாகமும் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
இப்பணியை 'பென்' என்ற நிறுவனம் கண்காணித்து ஆலோசனை அளித்து வருகிறது. ஒரு ஓட்டு சாவடிக்கு 30 சதவீதம் என்ற உறுப்பினர் சேர்க்கை 'டார்க்கெட்' சில நாட்களுக்கு முன் 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இச்சேர்க்கைக்கு அலைபேசி ஓ.டி.பி., பெறக்கூடாது என்ற வழக்கால் நெருக்கடியும் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுவரையான சேர்க்கை ஆய்வு செய்யப்பட்டது. அதில் ஒரு அலைபேசி எண்ணை அதிகபட்சம் 7 உறுப்பினருக்கு குறிப்பிடலாம் என்பதற்கு பதில் 11 முதல் 50 உறுப்பினர்கள் வரை ஒரே எண் குறிப்பிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவற்றில் பல எண்களை தொடர்புகொண்டு, நீங்கள் 'ஓரணியில் தமிழ்நாடு'ல் உறுப்பினராக சேர்ந்துள்ளீர்களா என விசாரித்தபோது சிலர் 'இல்லை' எனவும், சிலர் 'நம்பர் கேட்டாங்க கொடுத்தோம் உறுப்பினராக விருப்பம் இல்லை' எனவும் பதில் அளித்தனர். சிலர் எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக தெரியவந்தது.
இந்நிலையில் ஒரு அலைபேசிக்கு 2 பேர் வரை தான் சேர்க்க வேண்டும். ஒரே எண்ணில் 11 பேருக்குள் சேர்த்தவர்களை மீண்டும் சரிபார்க்கும் வகையிலும், 50 பேர் வரை சேர்த்தவர்கள் விவரங்களை நீக்கும் பணியும் நடக்கிறது. இதன் மூலம் 3 ஆயிரம் ஓட்டுச் சாவடிகளில் 10 லட்சம் பேர் வரை நீக்கப்படும் பட்டியலில் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: ஆரம்பத்தில் தெளிவாக வழிகாட்டுதல் இல்லை. ஒரு அலைபேசி எண்ணில் 7 பேர், 5 பேர், 11 பேர் சேர்க்கலாம் என மாறி மாறி தகவல் தெரிவிக்கப்பட்டது. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் அனைவருக்குமே தனித்தனி அலைபேசி எண்கள் இருப்பதில்லை.
அதேநேரம் 18 வயது பூர்த்தியடைந்த பெண்ணின் எண்களை யாரும் தரத் தயாராக இல்லை. ஆனால் 2 பேருக்கு ஒரு அலைபேசி எண் தான் குறிப்பிட வேண்டும் என்ற அடிப்படையில், இதுவரை சேர்த்தவர்களை நீக்கி விட்டு, மீண்டும் அவர்களை சரிபார்த்து அலைபேசி எண்களை சேருங்கள் என வலியுறுத்தப்படுகிறது. இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன என்றனர்.