அப்பா தொகுதியில் அரசியல் படிக்கிறாரா அமைச்சர் ரகுபதியின் மகன்?

அதிமுக-வில் இருந்த போது புதுக்கோட்டையில் தான் கட்டிய பொறியியல் கல்லூரிக்கு ‘அம்மா’ விசுவாசத்தில் ஜெ.ஜெ கல்லூரி என பெயர் வைத்தவர் அமைச்சர் ரகுபதி. அதுவே திமுக-வுக்கு வந்ததும் கருணாநிதி பெயரில் அந்தக் கல்லூரிக்குள் அரங்கம் அமைத்தவர். அந்தளவுக்கு, இருக்கும் இடத்துக்கு விசுவாசமாக இருந்து பழகிவிட்ட ரகுபதி, எந்தச் சர்ச்சையிலும் அத்தனை எளிதில் சிக்கிக் கொள்ளாதவர். இந்த ஆட்சியில் முதலில் சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்தார். இப்போது இயற்கை வளங்கள் துறையை கவனிக்கும் பொறுப்பை அவருக்கு தந்திருக்கிறது திமுக அரசு.
இந்த நிலையில், திமுக-வின் மற்ற மூத்த முன்னோடிகள் எல்லாம் எப்போதோ தங்களின் வாரிசுகளை அரசியலுக்கு இழுத்துவந்துவிட்ட நிலையில், ரகுபதியும் இப்போது அந்த தேசிய நீரோட்டத்தில் கலந்திருக்கிறார். ஆம், ரகுபதியின் மகன் மருத்துவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அவரது அரசியல் வாரிசாக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
அமைச்சர் ரகுபதி இப்போது புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கிறார். அவரது மகன் மருத்துவர் அண்ணாமலை, மதுராந்தகத்தில் உள்ள தங்களது மருத்துவக் கல்லூரியை நிர்வாகம் செய்து வருகிறார். மாவட்டச் செயலாளர், அமைச்சர் என தனது தந்தை அரசியலில் பிஸியாக இருந்தாலும் அரசியல் கலப்பில்லாமல் தான் உண்டு, தனது வேலை உண்டு என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை மட்டும் கவனித்து வந்தார் அண்ணாமலை. தந்தைக்கு உதவியாக தேவைப்படும் நேரத்தில் மட்டும் புதுக்கோட்டை பகுதியில் இலவச மருத்துவ முகாம்களை கட்சி சார்பில் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாமலை திமுக மருத்துவ அணி மாநில துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து நேரடி அரசியலுக்குள் வந்த அண்ணாமலை, மாநிலம் முழுவதும் திமுக மருத்துவ அணி கூட்டங்களில் பங்கெடுக்க ஆரம்பித்தார். இதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது தந்தையின் சொந்தத் தொகுதியான திருமயம் பக்கம் அவ்வளவாய் தலைக்காட்டாமல் இருந்த அண்ணாமலை, கடந்த 6 மாதங்களாக திருமயம் தொகுதிக்குள் பட்டி தொட்டி எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சியில் தனக்கென ஒரு இளைஞர் படையையும் சேர்த்து வைத்திருக்கும் அண்ணாமலை, போகுமிடங்களுக்கு அந்தப் படை சூழ போய் வருகிறார்.
கூடவே, திமுக-வினர் வீட்டு விஷேசங்களுக்கு தந்தை ஒரு பக்கமும் மகன் ஒரு பக்கமுமாக தங்களது வருகையை மறக்காமல் பதிவு செய்து வருகிறார்கள். அமைச்சர் ரகுபதிக்கு சமமாக அண்ணாமலைக்கும் தொகுதிக்குள் ஃபிளெக்ஸ் போர்டுகள் முளைத்து நிற்கின்றன. கட்சி கூட்டங்கள், நல உதவிகள் வழங்குதல், மருத்துவ முகாம்கள் என அனைத்திலும் முன் வரிசையில் நிற்கிறார் அண்ணாமலை.
இதற்கு நடுவில் மே மாதம், தொகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 'மாற்றத்தின் முன்னேற்றம், மாணவர் வழிகாட்டி' என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதன் மூலம் மேல்நிலை வகுப்பு மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார். 'பசுமை திருமயம், பசுமை தமிழ்நாடு' எனும் திட்டத்தின் மூலம் தொகுதி முழுவதும் மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார் அண்ணாமலை. கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு அண்ணாமலையின் ஏற்பாட்டில் திருமயம் தொகுதி முழுவதும் 101 ஊராட்சிகளில் 'விடியல் விருந்து' எனும் அன்னதான நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
அண்ணாமலையின் இந்த திடீர் ஆக்டீவ் அரசியல் குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்த போது, "அமைச்சருக்கும் வயசாகிருச்சு. உதயநிதியின் கரத்தை வலுப்படுத்தும் விதமாக கட்சிக்குள் இனிமேல் இளைஞர்களுக்குத்தான் எதிர்காலம் இருக்கும் என்கிறார்கள். ஒருவேளை, வயதைக் காரணம் காட்டி அமைச்சர் ரகுபதிக்கு சீட் கொடுக்க தலைமை யோசித்தால் அந்த இடத்துக்கு அண்ணன் அண்ணாமலை வந்துவிடுவார்.
அப்படியொரு முடிவெடுக்கப்பட்டால், திடீரென தேர்தலுக்காக வந்ததாக இருக்கக் கூடாது என்பதால் தான் முன்கூட்டியே தொகுதிக்குள் பரிச்சயமான நபராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் அண்ணாமலை. கடந்த மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற மருத்துவ அணி மண்டல மாநாட்டில் அண்ணாமலையை கொஞ்சம் தூக்கலாகவே துணை முதல்வர் உதயநிதி உயர்த்திப் பேசிவிட்டுச் சென்றார். ஆக, அடுத்து அண்ணாமலை தான்” என்றார்கள்.
தொடர்ச்சியாக காங்கிரஸ், மற்றும் தமாகா வசம் இருந்துவந்த திருமயம் தொகுதியில் கடந்த முறை தான் திமுக வென்றது. தங்களுக்கு சாதகமான தொகுதி என்பதால் இப்போதும் ப.சிதம்பரத்துக்கும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும் திருமயத்தின் மீது ஒரு கண் இருக்கிறது. காரணம், திருமயம் கார்த்தியின் சிவகங்கை மக்களவை தொகுதிக்குள் இருப்பது தான். இருந்த போதும் சிதம்பரமும் ரகுபதியும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அண்ணாமலைக்காக தொகுதியைப் பெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது என்கிறார்கள் திருமயம் திமுக வட்டாரத்தில்.
தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் தான் திடீரென ஆக்டீவ் அரசியலுக்குள் வந்திருக்கிறீர்களா என அண்ணாமலையிடம் கேட்டதற்கு, "தேர்தலில் நிற்க வேண்டும் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவெல்லாம் களப்பணி செய்யவில்லை. கட்சி பொறுப்பில் இருப்பதால் அது சார்ந்த மக்கள் பணிகளை செய்துவருகிறோம். அதேசமயம், கட்சித் தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிடுவேன்” என்றார்.