காவல் கண்காணிப்பு வளையத்தை விரிவுபடுத்துக!

சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஏதுமறியா 10 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் வாயை மூடி அருகிலுள்ள தோப்பிற்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் கொடூரமானது.
ரயில் பாதையை ஒட்டியுள்ள சாலையில் நடந்து சென்ற சிறுமி பட்டப் பகலில் இதுபோன்ற வன்முறையை சந்தித்திருப்பது பெண் குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதையே சுட்டிக் காட்டுகிறது. அந்தச் சிறுமி பள்ளியில் இருந்து தனது பாட்டி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
ஆள் நடமாட்டம் குறைவான சாலை என்பதால், அங்கு ஆபத்துக்கு உதவ யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவில் அந்த வாலிபர் சிறுமியை பின்புறமாக வலுக்கட்டாயமாக பிடித்து தூக்கிச் செல்வது பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஐஜி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது ஆறுதலளிக்கிறது. இருந்தாலும், சம்பவம் நடந்து 5 நாட்களைக் கடந்த நிலையிலும், குற்றவாளியை கைது செய்யாதது வருத்தத்திற்குரிய விஷயமாகும்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் காவல் துறையின் நடவடிக்கையை கேள்வி எழுப்பியுள்ளனர். சிசிடிவி பதிவின் வழியாக குற்றவாளியின் உருவம் தெளிவாகத் தெரியும் நிலையில், காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கைதுசெய்யாதது விமர்சனத்திற்கு வழிவகுத்துள்ளது.
இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அலைபேசி மூலம் பேசியதையும், சிறுமிக்கு கத்தி முனையில் மிரட்டல் விடுத்து ரத்தக் காயங்கள் ஏற்படுத்திய கொடுமையையும் சிறுமியின் தாயார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
எந்த துப்பும் கிடைக்காத வழக்குகளைக் கூட சாமர்த்தியமாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறியும் நமது காவல்துறை, அலைபேசி பயன்படுத்தியிருப்பது, சிசிடிவி பதிவு போன்றவிவரங்கள் கிடைத்தும் குற்றவாளியை இன்னும் பிடிக்காமல் இருப்பது மெத்தனமான நடவடிக்கையாகவே கருதப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பில் மாநில அரசும், காவல்துறையும் இன்னும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு காவல்நிலைய எல்லையிலும் எந்தெந்த பகுதிகள் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதிகள் என்ற விவரம் பராமரிக்கப்பட வேண்டும்.
இதுபோன்ற பகுதிகள் தான் குற்றவாளிகள் தங்கள் குற்றச் சம்பவங்களை அரங்கேற்ற உகந்த இடமாக இருக்கின்றன. இத்தகைய இடங்களை காவல்துறையினர் அடையாளம் காண்பது பெரிய விஷயமல்ல.
இதுபோன்ற இடங்களை காவல்துறை ரோந்து காவல் வாகனங்கள் மூலமாகவோ, சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, கட்டுப்பாட்டு அறையின் 24 மணி நேர கண்காணிப்பு வளையத்திற்குள்ளோ கொண்டு வர வேண்டும். அதன்மூலம், ஆள் நடமாட்டம் குறைவான பகுதிகள் காவல்துறையினர் நேரடி கண்காணிப்பு வளையத்திற்குள் வரும்போது நிச்சயம் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முடியும்.