கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு குழு தீவிரம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய 3 சிறப்பு குழுக்களை அமைக்க தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, ஆரம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற சிறுமி, அன்று சனிக்கிழமை என்பதால் மதியமே பள்ளி முடிந்து, ஆரம்பாக்கத்தில் உள்ள தன் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக, ரயில் நிலையத்தை கடந்து சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர், சிறுமியை மாந்தோப்பு பகுதிக்கு தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியோடியுள்ளார்.
இதையடுத்து அழுதவாறு பாட்டி வீட்டுக்கு வந்த சிறுமி, நடந்த சம்பவம் குறித்து, பாட்டியிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சிறுமி கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பிறகு, அவர், சென்னை ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடம் அருகே இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அந்த ஆய்வில், சிறுமியை இளைஞர் பின் தொடர்ந்து செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து, 5 தனிப்படை போலீஸார், ஆரம்பாக்கம் பகுதிகளில் பதிவான கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவம் நடந்து 6 நாட்கள் கடந்தும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்படாததால், ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள் நேற்று ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்யக் கோரி முழக்கமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீஸார், ‘மிக விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவார்’ என, உறுதியளித்தனர். ஆகவே, சிறுமியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சூழலில், டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை கைது செய்ய சிறப்பு குழுக்களை அமைக்க உத்தரவிட்டார். அதன் பேரில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க், திருவள்ளூர் எஸ்பி விவேகானந்த சுக்லா மேற்பார்வையில், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய 3 காவல் உட்கோட்டங்களின் டிஎஸ்பிக்கள் தலைமையில் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அக்குழுக்களும், தனிப்படையினரும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட இளைஞர் வடமாநில இளைஞராக இருக்கலாம் என்ற கோணத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாருடன், தமிழக பகுதிகள் மட்டுமல்லாமல், கும்மிடிப்பூண்டியை ஒட்டியுள்ள தடா, சூளூர்பேட்டை உள்ளிட்ட ஆந்திர பகுதிகளிலும் சிறப்பு குழுக்கள், தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.