8 மணி நேரத்தில் இருந்து 10 நேரமாக உயர்வு, அதிகரிக்கும் நெருக்கடி

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட தொழில்துறை நிறுவனங்களில் நாளொன்றுக்கு 8 மணி நேரமாக இருந்த வேலை நேரத்தை 10 மணி நேரமாக மாற்றி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களை வேலை வாங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, வார துவக்கத்தில் 10 மணி நேரம் வரை வேலை வாங்கினால் அடுத்துவரும் நாட்களில் வேலைநேரம் குறைந்து வார இறுதி நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுப்பு கிடைக்கும். அதற்கு அதிகமாக வேலைவாங்குவதென்றால் கூடுதலாக பணியாற்றும் நேர அளவுக்கேற்ப அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடைவெளியின்றி அதிகபட்சமாக 6 மணி நேரம் மட்டுமே வேலை வாங்கவேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. தொழில்துறையினரின் வசதிக்காக இந்த மாற்றங்களை செய்வதாக தெலங்கானா அரசு அறிவித்திருப்பது, தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த மாதமே இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அங்கு 9 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரத்தை 10 மணி நேரமாக கடந்த மாதம் மாற்றியதுடன், பெண் பணியாளர்களை இரவு பணியில் ஈடுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின்தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தொழில்துறையினரின் வசதிக்கேற்ப சட்டத்தை மாற்றும்படி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின்பேரில், மாநிலங்கள் இத்தகைய மாற்றங்களை செய்து வருகின்றன. தமிழகத்திலும் கடந்த 2023-ம் ஆண்டு 8 மணி நேரமாக இருந்த அதிகபட்ச வேலைநேரம் 12 மணி நேரமாக மாற்றியமைக்கப்பட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் வெளிநடப்பையும் மீறி சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் தொழிற்சங்கங்களின் போராட்ட அறிவிப்பையடுத்து, இச்சட்டத்தை வாபஸ் பெற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.