பட்டா மாறுதல் அவசியம்.. சொத்து பத்திரம் பதியும் சார் பதிவாளர் ஆபீஸில் செம மாற்றம்! சபாஷ் பதிவுத்துறை...

பட்டா மாறுதல் அவசியம்.. சொத்து பத்திரம் பதியும் சார் பதிவாளர் ஆபீஸில் செம மாற்றம்! சபாஷ் பதிவுத்துறை...
பத்திரப்பதிவு, பதிவுத்துறை ஆன்லைன் மயமாகிவிட்டது..

சென்னை: பத்திரப்பதிவு, பதிவுத்துறை ஆன்லைன் மயமாகிவிட்டது.. அந்தவகையில் பல்வேறு பணிகளை பொதுமக்களால் எளிதாக செய்து கொள்ள முடிகிறது.. இதனால், காலநேரம் விரயமாவது தவிர்க்கப்படுகிறது.. இடைத்தரகர்களின் அத்துமீறலும் கட்டுப்படுத்தப்படுகிறது.. மேலும், ஆன்லைனிலேயே கூடுதல் வசதிகளை செய்து தர தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.. இந்நிலையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் முக்கிய மாற்றம் நடக்க போகிறது.. இது சொத்துக்களை வாங்கும் பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் தந்து வருகிறது..

தமிழகத்தில், மொத்தம் 585 இடங்களில், சார் - பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.. இங்கு சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு தொடர்பான ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன..

அதாவது, மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளை பதிவு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

அதுமட்டுமல்லாமல் பத்திரப் பதிவுகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பதிவு, மற்றும் சங்கங்கள் பதிவு போன்ற பணிகள், சொத்து தொடர்பான ஆவணங்கள் பதிவு மற்றும் வில்லங்கச் சான்றிதழ் போன்றவையும் சார் பதிவாளர் அலுவலகத்தில், முக்கியமாக மேற்கொள்ளப்படும் பணிகளாகும்.

பத்திரப்பதிவில் அதிரடி

சார் பதிவாளர் அலுவலகங்கள், பதிவுத்துறையின் கீழ் இயங்கி, மாநிலம் முழுவதும் பரவியிருந்தாலும், ஆன்லைன் சேவைகள் மேம்படுத்தப்பட்டு, விரைவான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன..

பத்திரங்களை பதிவு செய்ய வருவோர், சார் - பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காகவே, கடந்த 2018-ல் ஸ்டார் 2.0 சாப்ட்வேர் ஆன்லைனில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, சொத்து வாங்குவோர், அதுகுறித்த தகவல்களை, பதிவுத்துறை இணையதளத்தில் முன்கூட்டியே உள்ளீடு செய்யலாம்... பிறகு அந்த பத்திரம் பதிவுக்கு ஏற்றதா, இல்லையா என்பதை, சார் - பதிவாளர்கள் முடிவு செய்வார்கள்..

மற்றொரு புதிய வசதி அறிமுகம்

இதில் ஏற்கப்படும் பத்திரங்களுக்கு மட்டுமே, பதிவுக்கான நேரம் ஒதுக்கி, டோக்கன் வழங்கப்படும்... இதனால், சார் - பதிவாளர் அலுவலகத்தில் செலவிடும் நேரம் வெகுவாக குறைகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஸ்டார் 3.0 என்ற சாப்ட்வேர் தயாரிக்கும் பணி நடந்து வருவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.. இதற்கு ரூ.323 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.. இதனால் பத்திரப்பதிவு தொடர்பான பணிகளில் கூடுதல் வசதிகள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில், சார் - பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வுகளை, வீடியோ காட்சிகளாக மட்டுமின்றி, குரல் பதிவுகளையும் கண்காணிக்க, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறதாம்.. காரணம், சார் - பதிவாளர்களின் ஒத்துழைப்புடன், விண்ணப்பதாரர்களுடன், வெளியாட்களும் வந்து செல்வதாக புகார்கள் கிளம்பியிருக்கின்றன..

5 கேமராக்கள் பொருத்தம்

இந்த வெளியாட்களின் நடவடிக்கையை தவிர்ப்பதற்காகவே, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், 5 இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை, நேரலை முறையில், டிஐஜி அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும்.

இத்தனை நாட்களும், சார் பதிவாளர் அலுவலகங்களில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்கள் மூலம், வெறும் காட்சிகள் மட்டுமே அதிகாரிகளால் டிஜிபி அலுவலகத்திலிருந்து காண முடிந்தது..

ஆனால், இனிமேல், பத்திரப்பதிவின்போது, பொது மக்களிடம், சார் - பதிவாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்னென்ன பேசுகிறார்கள்? என்பதையும் தலைமை அலுவலகத்தில் இருந்தே, அதிகாரிகளால் துல்லியமாக கேட்க முடியும். இதனால், வெளியாட்களையும், தரகர்களின் நடமாட்டத்தையும் எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்..