புன்னகை பூக்கள்

புன்னகை பூக்கள்

அங்கே ஓர் வீடிருந்தது, 

கொஞ்ச காலம் முன்பு வரைக்கும் 

அதுவழியாகத்தான் தினமும் போய்வருவேன். 

அங்கே ஒரு பாட்டியிருந்தாள் 

என்னுடைய பாட்டிகள் எல்லாம் 

இறைவனடி சேர்ந்தபிறகு 

எனக்கு எந்தப்பாட்டியைப் பார்த்தாலும் 

ஒருவித மரியாதையும், பாசமும் வந்துவிடும்

இந்தக்கிழத்தியிடமும் அப்படி ஒரு மரியாதை இருந்தது. 

சில நேரம் சிநேகமாய் சிரிப்பேன் 

ஆனால் அந்நியமான பார்வையைத்தவிர

அவளிடமிருந்து வேறெதுவும் வராது 

எல்லா மனிதரிடத்திலும் 

சிநேகமாய் சிரிப்பது பழகிவிட்டிருந்த எனக்கு 

இவளிடம் வெறுப்பு காட்டும் எண்ணம் ஏதுமில்லை. 

ஒருநாள், கண்ணு இங்கே வாயேன்! என்றாள்

வாசல் வரை போனேன் 

அறைக்குள்ளே ஒரு தாத்தா இருந்தார் 

அவரைக்காட்டி, அவருக்கு என்னமோ ஆயிடுச்சு பாரேன்?! என்றாள் 

என் வயதுக்கே 

சில மரணங்களைப் பார்த்துவிட்டதன் அனுபவத்தில் 

அவருடைய நிலை உடனே புரிந்துவிட்டது.

பாட்டி, தாத்தாவ ஆஸ்பத்திரி கூட்டிட்டுப்போகலாம் என்றேன், 

மரணங்கள் பழகியிருந்தும், 

மரணச்செய்திகளைத் தெரிவித்தோ, 

உற்றாருக்கு ஆறுதல் சொல்லியோ அனுபவமும் இல்லை, தைரியமும் இல்லை

கிழத்திக்கு அந்த அனுபவம் இருந்ததுபோலும் 

பாட்டியின் கண்களில் கண்ணீர் வழிய 

எதையோ தேடத்துவங்கினாள் 

ஏதோ ஒரு சிறிய டைரியைத் தூக்கிவந்தாள் 

ஒரு நம்பரைக் கொடுத்து 

இந்த நம்பருக்கு கொஞ்சம் போன் போட்டு தர்ரியா என்றாள் 

உடனே அந்த எண்ணுக்கு அழைத்தேன், 

யாரோ ஒருவர் பேசினார், 

பாட்டியிடம் கொடுத்தேன் 

அப்பா இறந்துட்டார்ப்பா, உடனே வர்றியா என்று கெஞ்சும் குரலில் கேட்டார். 

எதிர்க்குரலில் பெரிதாய் எந்தவொரு வருத்தமும் இருப்பதாய்த் தோன்றவில்லை 

பேசிமுடித்ததும் 

இன்னொரு நம்பர் தந்தார் பாட்டி, 

திரும்ப அழைத்தேன், 

அதே இறப்புச்செய்தி, 

அதேபோன்றதொரு குரல், இத்யாதி. 

ரொம்ப நன்றி கண்ணு, என்று சொல்லிவிட்டு, 

தாத்தா முகத்தைப் பார்த்தவாறு கண்கலங்க நின்றாள் பாட்டி, 

அங்கிருந்து போய்விடலாம் போல இருந்தது, போகவில்லை. 

பாட்டியும் எதுவும் பேசவில்லை 

சில நிமிடம் அழுதாள், 

அவளே தாத்தாவைப் படுக்க வைத்தாள் 

உதவி செய்யவா என்று கேட்டவனுக்கு 

பதிலே சொல்லவில்லை 

கிழவனின் தலைக்கு மேல் விளக்கேற்றினாள் 

வேடிக்கை பார்த்துக் கொண்டே 

சில மணி நேரங்கள் இருந்தேன் 

யாரோ சிலர் ஒருவழியாய் வந்தனர் 

எல்லா இறப்பிலும் நடக்கும் 

சில காரியங்கள் உடனுக்குடன் நடந்தன

பாட்டியையும் வீட்டையும் விட்டுவிட்டு ஒருவழியாய் வெளியே வந்தேன் 

அதன் பின்னர் அந்த வீட்டை தாண்டும்போதெல்லாம் 

பாட்டி கண்ணுக்குத் தெரியவில்லை 

சில நேரம் என் கண்கள் பாட்டியைத்தேடும்

பாட்டிக்கு ஏதேனும் ஆகிவிட்டதோ என்றெல்லாம் யோசித்திருந்தேன். 

சில மாதங்கள் கழித்து 

மீண்டும் அதே வழியில் செல்லும்போது 

அந்த வீடு இடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது  

தாத்தா மரணத்தன்று பார்த்த அந்த யாரோ ஒருவர் 

சில ஆட்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார் 

அவரிடம் சென்று வலியப் பேச்சுக்கொடுத்தேன்

சார், பாட்டி இருந்தாங்களே, 

அவங்க நல்லாருக்காங்களா? என்று கேட்டேன். 

அவர் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, 

அவங்க தவறிட்டாங்க தம்பி என்றுவிட்டு 

திரும்பவும் வேலையாட்களுடன் பேசத்தொடங்கினார். 

இந்தக்கிழத்தியும் இறந்துபோனாள் 

என்று அவளுக்காக ஒரு நிமிட வருத்தத்தோடு 

என் வழியில் செல்லத்தொடங்கினேன்

சில நாட்களுக்குப் பிறகு 

எதிலோ நாட்டமேற்பட்டு, 

எங்கள் ஊரின் பெரியகோவிலுக்குப் போனேன், 

கோவில் வாசலில் அதே பாட்டி. 

எனக்கு அந்த வீட்டின் நினைவிருந்தது போலவே 

அப்பாட்டிக்கும் 

என் புன்னகை நினைவிருந்திருக்கும் போல. 

அவளிடமிருந்து என்னைப் பார்த்து ஒரு சிநேகப் புன்னகை. 

ஆனால் என்னால்தான் இப்போது  

அவளைப்பார்த்து புன்னகைக்க முடியவில்லை. 

                                  ....,..........,......