பாகிஸ்தானில் தங்கி வெடிகுண்டு பயிற்சி" - 30 ஆண்டுகளுக்கு பின் கைதான பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்!

அபுபக்கர் சித்திக், பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக இருந்துள்ளார். போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் போன்ற பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சதிச் செயல்களில் ஈடுபட்டு 30 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வந்தவர் நாகூரை சேர்ந்த அபுபக்கர் சித்திக். அல்-உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இவருடன் சேர்ந்து, மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவரும், கடந்த ஒன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர். அத்வானி ரத யாத்திரையில் பைப் குண்டு வைக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை தொடர்பாக பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி யூனீஸ் ஆகியோர் 30 ஆண்டுகளுக்குப் பின், கைது செய்யப்பட்டனர். ஆந்திராவில் அடையாளத்தை மாற்றி பதுங்கியிருந்தவர்களை கோவை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தமிழக தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஆந்திர காவல் துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர், இரு பயங்கரவாதிகளையும் கோவைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். இவர்களில் அபுபக்கர் சித்திக், பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக இருந்துள்ளார். போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் போன்ற பயங்கரவாதிகளுக்கு வழிகாட்டியாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
இருவரும் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்துறை ஆறு நாட்களாக விசாரணை செய்தது. இந்த விசாரணையில் ஆந்திர காவல்துறையினர் மற்றும் மத்திய உளவு பிரிவினரும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்
இந்நிலையில் அபூபக்கர் சித்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. அதன்படி, அபூபக்கர் சித்திக் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு சென்று சில காலம் தங்கி வெடிகுண்டு தயாரிப்பு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் சிலருக்கு அவர் பயிற்சி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
முன்னதாக, தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் கோவை, ஈரோடு, மூணாறு, குஜராத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு அடிக்கடி அபுபக்கர் சித்திக் சென்று வந்துள்ளார். அந்த பயணத்தில் பலரையும் சந்தித்து பேசி இருப்பதும் அம்பலமாகியுள்ளது. இதனால், பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் யாரையெல்லாம் சந்தித்து பேசியுள்ளார்?, இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளின் பக்கம் திருப்பி உள்ளாரா? என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது