பாகிஸ்தானில் கொடூர தண்ணீர் பஞ்சம்.. துணி துவைத்த தண்ணீரை மீண்டும் பயன்படுத்தும் மக்கள்.. அவலம்

டெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானின் பல இடங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் துணி துவைக்க பயன்படுத்தும் தண்ணீரை கழிவறைக்கு பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
அண்டை நாடான பாகிஸ்தானில் மழை அளவு என்பது குறைந்த அளவில் மட்டுமே இருக்கிறது. பாகிஸ்தானின் ஒரு பகுதிகள் வறண்டு போய் உள்ளது. அதாவது பாகிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் வறண்டுள்ளன. அதேவேளையில் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில், ஆண்டுக்கு 400 மிமீ முதல் 1,000 மிமீ வரை மழை பெய்யும்.
இந்த ஆண்டு பாகிஸ்தானில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது பாகிஸ்தானில் தற்போது நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. பூமிக்கடியில் 180 அடியில் தான் தண்ணீர் கிடைக்கிறது. பாகிஸ்தானில் ஆண்டுதோறும் ஒரு மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்து வருகிறது. நகரமயமாக்கல், காடுகள் அழித்தல், போதிய அளவு மழை பெய்யாதது உள்ளிட்டவற்றால் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்துக்கு ஆண்டுதோறும் சென்று வருகிறது.
ஆண்டுதோறும் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருவதால் பலரும் ஆழ்துளை கிணறுகளை ஆழமாக தோண்டி உள்ளனர். இது தண்ணீர் பஞ்சத்தை இன்னும் அதிகப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி பல இடங்களில் அசுத்தமான தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. சுத்திகரிப்பு நிலையங்களும் சரியாக செயல்படாததால் அசுத்தமான தண்ணீரை டேங்கரில் கொண்டு வந்து பயன்படுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானில் ஒரு குடும்பம் தங்களின் வருமானத்தில் 20 சதவீதத்தை தண்ணீருக்காக செலவிட வேண்டி உள்ளதாக டேட்டாக்கள் தெரிவிக்கின்றன
இதுதவிர தற்போது பாகிஸ்தான் மக்கள் தண்ணீரை மறுபயன்பாடு செய்து வருகின்றனர். அதன்படி துணி துவைக்கும் தண்ணீரை வீணாக்காமல் அதனை கழிவறைக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பஞ்சம் காரணமாக இஸ்லாமாபாத் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குழந்தைகள் பள்ளி முடிவடைந்த பிறகு தள்ளுவண்டியில் தண்ணீர் எடுக்க செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இவர்கள் அருகே உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களில் வரிசையில் நின்று தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இதுபற்றி மாணவன் முஹம்மது தாஹா கூறுகையில், ‛‛இங்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. சில நேரங்களில் சுத்திகரிப்பு மையங்களிலும் கூட உடனடியாக தண்ணீர் காலியாகி விடுகிறது. இதனால் கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. அப்படி காத்திருந்தாலும் கூட தண்ணீர் மண் கலந்து வருகிறது. இதனால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது'' என்றார்.
இந்த தண்ணீர் பற்றாக்குறையால் டேங்களுக்கான மவுசு அதிகரித்துள்ளது. ஆனால் டேங்கருக்கும் கூட தண்ணீர் கிடைக்காத நிலை சில இடங்களில் உள்ளது. இல்லாவிட்டால் அசுத்தமான தண்ணீரை பிடித்து விற்பனை செய்கின்றனர். அதனையும் பொதுமக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். இதுபற்றி தண்ணீர் டேங்கர் டிரைவர் முகமது அனஸ் கூறகையில், ‛‛நாங்கள் வசிக்கும் இடங்களில் ஆழ்துளை கிணறுகள் இல்லை. பிற இடங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருகிறோம். ஆனால் நீர்மட்டம் குறைந்துள்ளதால் எங்களின் தொழிலும் பாதிக்கப்படுகிறது'' என்றார்.
அதேபோல் உம் இ அனாஸ் என்பவர் கூறுகையில், ‛‛குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைப்பது இல்லை. குழந்தைகளுக்கு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வருகிறோம். அதுவும் சுத்தமானதாக இல்லை'' என்றார். பரகாகுவில் வசிக்கும் சோயப் அகமது கூறுகையில், ‛‛எனத குடும்பத்துக்கு சுத்தமான தண்ணீரை கொண்டு வர 20 கிலோமீட்டர் தொலைவு தினமும் பயணித்து வருகிறேன். 10 லட்சம் பேர் வசித்தாலும் கூட சுத்தமான தண்ணீர் வசதி இல்லை. அசுத்தமான தண்ணீரை குடிப்பதால் பலரும் Hepatitis C-யால் பாதிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.
இதுபற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர் அசாத் குஃப்ரான் கூறுகையில், ‛‛பாகிஸ்தானில் தண்ணீர் இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் நிர்வாகம் சரியில்லாதது தான். இஸ்லாமாபாத்தில் தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க அரசாங்கமும், தனியார் தொண்டு நிறுவனங்களும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துள்ளன. ஆனால் அதன் தரத்தை உறுதி செய்யும் ஆலைகள் இல்லை. இதனை நெறிப்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கி அரசு ஆய்வகங்களை உருவாக்கி உள்ளது. அதிலும் அதிகாரிகள் இல்லை. இதனால் தான் மக்கள் அசுத்தமான தண்ணீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
நாட்டில் நிலத்தடி நீர் ஒழுங்குமுறைகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது .இது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்'' என்றார்