மீன் தொட்டி வாஸ்து.. அரோவானா மீனின் அவசியம்.. வீட்டில் அதிர்ஷ்டம், பணம் கொட்ட உதவும் பெஸ்ட் டிப்ஸ்

மீன் தொட்டி வாஸ்து.. அரோவானா மீனின் அவசியம்.. வீட்டில் அதிர்ஷ்டம், பணம் கொட்ட உதவும் பெஸ்ட் டிப்ஸ்
வீட்டில் அதிர்ஷ்டம், பணம் கொட்ட உதவும் பெஸ்ட் டிப்ஸ்

சென்னை: மீன்களை வீடுகளில் தொட்டியில் வளர்ப்பது மிகச்சிறந்த வாஸ்து பரிகாரமாக கருதப்படுகிறது.. மீன்களை வளர்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கும் நன்மை தரக்கூடியது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. வாஸ்துபடி மீன் தொட்டிகள் தரும் நன்மைகள் என்னென்ன? மீன் தொட்டிக்கான திசை என்ன? பெஸ்ட் வாஸ்து மீன் எது? மீன் தொட்டிகளை வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இவைகளை பற்றியெல்லாம் இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

மனதில் பாரம் படிந்திருந்தாலோ, மன அழுத்தம் இருந்தாலோ, குழப்பமான மனநிலை இருந்தாலோ, மீன்கள் நீந்துவதை பார்த்தாலே போதும்.. மனம் லேசாகிவிடும். அதுமட்டுமல்ல, இதய துடிப்பை குறைக்கக் கூடிய சக்தி , தொட்டியில் வளர்க்கப்படும் மீன்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன

நரம்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைத்து, ரத்த அழுத்தத்தையும் இது குறைக்க செய்கிறது.. எனவே, High-BP உள்ளவர்கள், வீடுகளில் தொட்டியில் மீன் வளர்க்கலாம்.. இதனால், வீட்டிற்குள் பாசிட்டிவ் எனர்ஜி பெருகும்..

இதனாலேயே வாஸ்துவில் முக்கிய இடத்தை மீன்கள் பிடித்துள்ளன. மகாவிஷ்ணுவின் முதல் அவதாரம் மச்ச அவதாரமாகும்.. சப்தரிஷிகளை காக்க பெருமாள் மீன் அவதாரம்தான் எடுத்தார். எனவே மீன்களை வீட்டில் வளர்ப்பதற்கும் ஆன்மீகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

பெஸ்ட் வாஸ்து மீன்

வாஸ்து முறைப்படி, கோல்டன் ஃபிஷ் என்ற தங்கமீன், ராகன் மீன் போன்ற மீன்களை வளர்க்கலாம். ஆனால், ஆஸ்கார், பிரான்ஹஸ் போன்ற வகையான மீன்களை வளர்த்தால், குடும்பத்துக்கு ஆகாது என்பார்கள்

மற்றபடி பல வண்ணங்களிலுள்ள மீன்களை வீட்டில் வளர்க்கலாம். இதில் உலகளவில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது டிராகன் மீன் எனப்படும் அரோவானா மீன் வகைகளாகும்.. குடும்பத்தில் அனைத்து அதிர்ஷ்டத்தையும் இந்த மீன் தந்துவிடுமாம்..

பணவரவு, ஆரோக்கியம், வளர்ச்சி, லாபம் போன்ற அனைத்துமே இந்த மீன் வளர்ப்பதால் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

கருப்பு மீன் வளர்க்கலாமா

ஆனால் லட்சக்கணக்கில் மீன்களை வாங்கி, வீட்டில் வளர்த்தாலும், ஒரே ஒரு கருப்பு மீன் தொட்டியில் இருப்பது நல்லதாம். கண் திருஷ்டிகள், எதிர்மறை ஆற்றல், மொத்தத்தையும் இழுத்து கொள்ளும் தன்மை கருப்பு நிற மீனுக்கு உண்டு... அந்த கருப்பு மீன் இறந்தாலும், கவலைப்பட தேவையில்லை. உடனடியாக அதை வெளியே எடுத்துவிட்டு, வேறொரு கருப்பு மீனை தொட்டியில் விட வேண்டும்.

எந்த திசையில் வைக்கலாம்

எத்தனை மீன்களை வாங்கி வளர்த்தாலும், அவைகள் ஒற்றை இலக்கத்துடன் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.. தண்ணீரும் அழுக்காக மாறிவிடாமல் கவனித்து கொள்ள வேண்டும்

.சதுரமான, நீளமான மீன் தொட்டியை தேர்ந்தெடுக்கலாம். மீன் தொட்டிகளை தென்கிழக்கு மூலையில் அமைக்கலாம்.. வடக்கு, கிழக்கு அல்லது வட கிழக்கு திசையில் மீன் தொட்டியை வைப்பதால் நிதிப்பற்றாக்குறை இருக்காது.. வடகிழக்கு திசையில் வீட்டிற்குள் நுழையும்போது, இடது பக்கத்தில்தான் வைப்பது இன்னும் சிறப்பு.. அதேபோல, தலைவாசலுக்கு இடது புறம் வைத்தால், குடும்பத்தில் ஒற்றுமை கூடும்..

மீன் சிலைகள் நன்மை

எக்காரணம் கொண்டும், படுக்கையறை, கிச்சன், நடு ஹால், நேரடியாக வெயில், வெளிச்சம் படக்கூடிய இடங்கள், படிக்கட்டுகள், ஏசி, டிவி போன்ற எலக்ட்ரிக் பொருட்களுக்கு அடியில் வைக்கக்கூடாது. வீட்டிற்குள் நுழைந்தால் அவர்கள் கண்ணில் படும்படி வைக்க வேண்டும்.

மீன்சிலைகளையும் வீட்டில் வைக்கலாம்.. பித்தளை அல்லது வெள்ளியால் ஆன மீன் சிலையை வீட்டில் வைத்திருப்பதன் மூலம், குடும்ப உறுப்பினர்களிடம் முன்னேற்றம் காணப்படும், வருமானமும் பெருகும்.. மீன் சிலையை வீட்டின் வடகிழக்கு திசையை நோக்கி எப்போதும் வைத்திருக்க வேண்டும்.. எக்காரணம் கொண்டும், மீன்சிலை மீன் தொட்டிகளை தெற்கு திசையில் வைக்கக்கூடாது.