என் தோழி துபாய் போய்விட்டாள்.. பெங்களூர் டிராபிக்கால் நான் இன்னும் வீடு திரும்பல! நெட்டிசன் புலம்பல்...

என் தோழி துபாய் போய்விட்டாள்.. பெங்களூர் டிராபிக்கால் நான் இன்னும் வீடு திரும்பல! நெட்டிசன் புலம்பல்...
பெங்களூரின் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை..

பெங்களூர்: பெங்களூரின் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. பெங்களூர் டிராபிக் குறித்து நெட்டிசன்களின் புலம்பல் அவ்வப்போது டிரெண்டாகும். அப்படியொரு பதிவு தான் இப்போது டிரெண்டாகி வருகிறது. அதாவது தனது தோழி பெங்களூரில் இருந்து துபாய்க்கே விமானம் மூலம் சென்றுவிட்ட போதிலும், தங்களால் பெங்களூர் டிராபிக்கை கடந்து வீட்டைக் கூட அடைய முடியவில்லை என்று பதிவிட்டுள்ளனர்...

கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நாளுக்கு நாள் இந்த டிராபிக் சிக்கல் மோசமாகிக் கொண்டே போகிறது. டிராபிக் பிரச்சனையைச் சரி செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் கூட பெரியளவில் பலன் கிடைப்பதில்லை. பெங்களூர் டிராபிக் குறித்து இணையத்திலும் பல போஸ்ட்களை நாம் பார்த்திருப்போம்....

பெங்களூர் டிராபிக்

அப்படியொரு பெங்களூர் டிராபிக் நெரிசல் குறித்த ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு தான் இப்போது சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெங்களூரில் இருந்து விமானம் மூலம் தனது தோழி துபாய்க்கே சென்றுவிட்ட போதிலும், தான் இன்னும் பெங்களூர் டிராபிக்கில் மாட்டி வீட்டுக்குத் திரும்ப முடியாமல் தவிப்பதாகப் பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்..

துபாய்க்கே போய்விட்டார்

டிராவல் அண்ட் புட் விலாக்ஸ் என்ற இன்ஸ்டா பக்கத்தில் தான் இந்த போஸ்ட் இருக்கிறது. அந்த வீடியோவில் மிக நீண்ட முடிவே இல்லாதது போலத் தோன்றும் டிராபிக் இருக்கிறது. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் துபாய்க்குச் செல்லும் தனது தோழியை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பியதாகவும், அவரது தோழி துபாய் சென்றடைந்த பிறகும் தான் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்ததாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், மிக நீண்டதாக இருக்கும் வாகனங்கள் வரிசையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.

அந்தப் பெண் மேலும், "துபாய்க்குச் செல்லும் எனது தோழியை பெங்களூர் விமான நிலையத்தில் இறக்கிவிட்டேன். அவள் துபாய் சென்று சேர்ந்துவிட்டாள், ஆனால் நான் இன்னும் பெங்களூர் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறேன்" என்று அந்தக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது உண்மைச் சம்பவம் என்றும் பெங்களூரில் வசிப்பவர்களை டேக் செய்யுங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது..

நெட்டிசன்கள்

அந்தப் பெண்ணின் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், பலரும் அதைப் பகிர்ந்து வருகிறார்கள். மேலும், பலரும் தங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர். இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "இது எனக்கும் நடந்தது. எனது பெற்றோர் ஏர்போர்ட் வந்து என்னை டிராப் செய்துவிட்டுச் சென்றனர். அவர்கள் வீடு திரும்புவதற்குள் நான் டெல்லியில் தரையிறங்கினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு நபர், "ஒருமுறை நான் மாலத்தீவில் இருந்து பெங்களூர் வந்தேன். அப்போது செக் இன் செய்தவுடன் எனது நண்பருக்குக் கால் செய்து ஏர்போர்ட் வருமாறு சொன்னேன். அவர் அப்போதே வீட்டில் இருந்து கிளம்பினார். நான் பெங்களூரிலேயே தரையிறங்கி விட்டேன்.. எனது லக்கேஜ்ஜை எடுத்து வெளியே வந்த பிறகும், அவர் இன்னும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதை அறிந்தேன்" என்று கூறியுள்ளார்..

வெறும் விளம்பரம்

இந்தளவுக்கு டிராபிக் என்றால் நாம் நடந்தே சென்றுவிடலாம் என்று மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார். இருப்பினும், சிலர் இந்தக் கருத்துக்கு உடன்படவில்லை. சும்மா விளம்பரத்திற்காக இதுபோல போஸ்ட் செய்வதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். ஒரு நெட்டிசன், "வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சுமார் 3 மணி நேரம் முன்பே நாம் ஏர்போர்ட் சென்றிருக்க வேண்டும். அதையும் சேர்த்தால் 6 மணி நேரம் ஆகும். விமான நிலையத்திலிருந்து ஹெப்பாள் செல்ல உண்மையில் ஆறு மணி நேரம் ஆகுமா? இது உண்மையல்ல, விளம்பரத்துக்காகச் செய்யப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்...