இறந்து போன என் கணவரை, உயிர்ப்பித்து மீண்டும் கொன்று விட்டனர்" - உ.பி.யில் நடந்த காப்பீட்டு மோசடி

மேற்கு உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், காப்பீட்டுப் பணத்தை அபகரிக்க பல்வேறு வகையான மோசடிகளில் ஈடுபட்ட கும்பல்களை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய விசாரணையில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆஷா ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், காப்பீட்டு உரிமைகோரல் புலனாய்வாளர்கள் மற்றும் பலரும் உள்ளனர் என்று விசாரணையை வழிநடத்தும் சம்பல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) அனுக்ரிதி சர்மாவின் கூறுகிறார்.
காப்பீட்டுப் பணத்தைப் பறிப்பதற்காக, கடுமையான நோய்வாய்ப்பட்டவர்களுக்கு காப்பீடு செய்யப்பட்டதாகவும், இறந்தவர்கள் உயிருடன் இருப்பதாக ஆவணங்களில் காட்டப்பட்டதாகவும், கொலைகள் கூட செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த மோசடிகளுக்காக, மக்களுக்குத் தெரியாமல் ஆதார் தரவு மாற்றப்பட்டு வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
காப்பீட்டு மோசடிகள் தொடர்பான விசாரணையின் போது, இறந்தவர்களை ஆவணங்களில் உயிருடன் இருப்பதாகக் காட்டி காப்பீடு எடுக்கப்பட்ட வழக்குகளும் வெளிச்சத்திற்கு வந்தன.
டெல்லியைச் சேர்ந்த திரிலோக் என்பவரின் வழக்கு அவ்வாறானது தான். திரிலோக் ஜூன் 2024 இல் புற்றுநோயால் இறந்தார்.
டெல்லியில் உள்ள நிகம் போத் தகனக் கூடத்தில் திரிலோக் தகனம் செய்யப்பட்டார், அதன் சீட்டும் கிடைக்கிறது.
புற்றுநோய் காரணமாக திரிலோக் இறந்த பிறகு, காப்பீட்டு மோசடி கும்பல் காப்பீட்டு பணத்திற்காக அவர் உயிருடன் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
திரிலோக்கின் மரணத்திற்குப் பிறகு, மோசடி கும்பல் டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் அவரது கணக்கைத் திறந்து, காப்பீட்டுக் கொள்கையைப் பெற்று, பின்னர் டெல்லியில் உள்ள ஜிபி பந்த் மருத்துவமனையில் இருந்து அவரது இறப்புச் சான்றிதழைப் பெற்றது.
இந்தக் கும்பல் காப்பீட்டுத் தொகையை எடுப்பதற்கு முன்பே, சம்பல் போலீசாரால் அது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் வசிக்கும் திரிலோக்கின் மனைவி சப்னா, இந்த மோசடியால் மிகவும் மனமுடைந்து போயுள்ளார்.
சப்னா ஒரு கடை நடத்தி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்.
சப்னா தனது கணவரை நினைத்து உணர்ச்சிவசப்படுகிறார்.
"எங்களுக்கு எல்லா இடங்களிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் புற்றுநோய் தீவிரமடைந்து கொண்டே இருந்தது. அவரது மரணத்திற்குப் பிறகு நான் மிகவும் உடைந்து போனேன்" என்று கூறுகிறார் சப்னா.
திரிலோக் இறந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு, காப்பீட்டுக் குழு சப்னாவைத் தொடர்பு கொண்டு, அரசாங்க உதவியைப் பெறுவதாக உறுதியளித்தது.
சப்னா அரசாங்கத்தின் உதவிக்காகக் காத்திருந்தார்.
பின்னர், ஆவணங்களை எடுத்த கும்பலுடன் தொடர்புடையவர்கள் அவரது அழைப்புகளை எடுப்பதை நிறுத்தினர்.
காப்பீட்டு மோசடி விசாரணையின் போது சம்பல் போலீசார் சப்னாவை அடைந்தபோது, அவரது கணவரின் காப்பீடு அவரது மரணத்திற்குப் பிறகு செய்யப்பட்டது என்பது அவருக்குத் தெரியாது.
"போலீஸ் வந்தபோது, நான் மிகவும் பயந்தேன். நான் கணவரை இழந்த பெண். போலீஸ் வந்தபோது, நான் ஏதோ தவறு செய்துவிட்டதாக எல்லோரும் நினைத்தார்கள்.
பின்னர் அனுக்ரிதி சர்மா எனக்கு போன் செய்து, உங்களுக்கு எதிராக ஒரு குற்றம் நடந்துள்ளதாகவும், உங்கள் கணவர் உயிருடன் இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு மீண்டும் கொல்லப்பட்டதால் உங்கள் வழக்கு சிக்கியுள்ளது என்றும் கூறினார்" என்கிறார் சப்னா.
மேலும், "இந்த கும்பல்கள் ஏற்கனவே சிக்கலில் இருக்கும் என்னைப் போன்றவர்களை குறிவைக்கின்றன. காவல்துறையினர் எனது நிலைமையைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், எனது ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதால், இந்த மோசடியில் நான் குற்றவாளியாகியிருப்பேன்" என்றும் அவர் தெரிவித்தார்.