நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆக. 2 தொடக்கம்: குடியிருப்புகளின் அருகிலேயே இலவச முழு உடல் பரிசோதனை

சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளின் அருகிலேயே இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம். சென்னை மயிலாப்பூர் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளிவளாகத்ததில் “நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வரால் தொடங்கப்படவுள்ளது.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் மக்களை தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்கின்ற வகையில் செயல்படுத்தப்படவுள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். முழு உடல் பரிசோதனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை ஆகஸ்ட் 2-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்தும் இடம்பெறுகிறது.
அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒவ்வொரு சனிகிழமையிலும், காலை 9 முதல் மாலை 4 மணிவரை அவரவர் குடியிருப்பு பகுதிகள் சார்ந்தே முகாம் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, துண்டு பிரசுரங்கள் மூலமாக அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
இதே முகாமில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதிக்கப்பட்டு, எத்தனை சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதற்கான சான்றிதழ் வழங்கப்படும். புதிய காப்பீடு திட்டத்தில் இணைவதற்கும் முகாமில் விண்ணப்பிதற்கான வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக, மாநிலம் முழுதும், 1,256 முகாம்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.