வாணியம்பாடியில் நடுத்தெருவில்.. ஆத்தி எத்தா தண்டி? குன்றிலிருந்து குபீர்னு வந்துருச்சு இந்த மழைக்கே

வாணியம்பாடியில் நடுத்தெருவில்.. ஆத்தி எத்தா தண்டி? குன்றிலிருந்து குபீர்னு வந்துருச்சு இந்த மழைக்கே
தமிழகம் முழுவதும் குளிர்ந்த வானிலை நிலவி வரும்போது, பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது...

வேலூர்: தமிழகம் முழுவதும் குளிர்ந்த வானிலை நிலவி வரும்போது, பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.. இதில் கடந்த தினங்களாகவே திருப்பத்தூர் மாவட்டத்தில், விடாமல் மழை பெய்துள்ளது.. இன்றும், நாளைய தினமும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்நிலையில், வாணியம்பாடி பகுதியில் ஏற்பட்ட சம்பவம், அந்த பகுதி மக்களுக்கு பீதியையும், அதிர்ச்சியையும் உண்டுபண்ணியிருக்கிறது.. இதுகுறித்த வேண்டுகோள் ஒன்றையும் அரசுக்கு விடுத்துள்ளனர்..

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது...

நேற்று முன்தினம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியிருந்தது...

திருப்பத்தூர், வாணியம்பாடி

பிறகு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி திடீர் வானிலை அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.. அதில், நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நெல்லை, விருதுநகர், கோவை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

அதன்படியே, மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.. இதில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேய்மழை கொட்டியது.. இதனால் அங்குள்ள சில பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது..

வாணியம்பாடி தெருவில்

மேலும், நேதாஜி நகர் பகுதியில் மலைக்குன்று மீதிருந்த பெரிய பாறை தெருவில் உருண்டு விழுந்துவிட்டது.. தெருவின் இருபுறமும் வீடுகள் இருந்த நிலையில், திடீரென மலையிலிருந்து பாறை விழுந்துள்ளது. ஆனால் பாறை விழுந்த நேரம், அந்த இடத்தில் பொதுமக்கள் யாரும் நடமாடவில்லை என்பதால், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை..

அதேபோல, அவ்வளவு பெரிய பாறை, வீட்டின் மீது விழுந்தால், நிச்சயம் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டிருக்கும்.. ஆனால், சாலையின் நடுவில் பாறை விழுந்துள்ளது.. கடந்த 2 நாட்களாக ஓயாத மழை பெய்ததால்தான், பாறை சரிந்து விழுந்திருக்கலாம் என்கிறார்கள்..

லேசான மழைக்கே இப்படியா

ஓயாத மழை என்றாலும், லேசான மழைக்கே பாறை விழுந்துள்ளது அப்பகுதி மக்களுக்கு கிலியை தந்து வருகிறது. இரவு 9.20-க்கு இந்த பாறை சாலையில் உருண்டு விழுந்துள்ளதாக சொல்கிறார்கள்..

அனைவருமே இந்த ஒரு சாலையை மட்டுமே பிரதானமாக பயன்படுத்தி வரும்போது, பாறை உருண்டுள்ளது, பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொந்தரவை ஏற்படுத்தி வருகிறது.. எனவே சாலையின் நடுவில் உள்ள பாறையை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இணையதளம் முழுவதுமே இந்த ராட்சச பாறையின் போட்டோதான் வைரலாகி கொண்டிருக்கிறது..

மீண்டும் கனமழை அதிகமாகும்

இதனிடையே, தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்...

நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் வரும் 26ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...