பண்ருட்டியில் அரசு மருத்துவர் வீட்டில் 158 பவுன் நகைகள் திருட்டு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புது பிள்ளையார்குப்பத்தில் வசிப்பவர் ராஜா. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி, கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது வீட்டின் கீழ் தளத்தில் ராஜாவின் தந்தை வசித்து வரும் நிலையில், மேல் தளத்தில் ராஜா, தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணிக்குச் சென்ற ராஜா நேற்று காலை வீடு திரும்பினார்
அப்போது வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 158 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக காடாம்புலியூர் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார். கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார், திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்..