ஜெயலலிதா சொ.கு வழக்கில் தொடர்பில்லாத தனது சொத்தும் முடக்கப்பட்டதாக மூதாட்டி வழக்கு

ஜெயலலிதா சொ.கு வழக்கில் தொடர்பில்லாத தனது சொத்தும் முடக்கப்பட்டதாக மூதாட்டி வழக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சொத்தை முடக்கி

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சொத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 1991-96ம் ஆண்டு காலத்தில் முதல்வராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, இந்த வழக்கு தொடர்பாக முடக்கப்பட்ட சொத்துகளை பத்திர பதிவு செய்யக் கூடாது என, வாலாஜா பாத் சார் பதிவாளருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கடந்த 2021 பிப்ரவரி 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்

.இந்தச் சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜா பாத் வட்டம், ஊத்துக்காடு கிராமத்தில் தனக்கு சொந்தமான 2.15 ஏக்கர் நிலத்துக்கு வில்லங்கச் சான்றிதழ் விண்ணப்பித்தபோது, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்ததாக கூறி, வாலாஜா பாத், ஆறுமுகப்பேட்டையை சேர்ந்த 68 வயது மூதாட்டி கம்சலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.