ஓட்டுநர் - நடத்துநர் பணியில் 3,274 காலி இடங்களுக்கு தேர்வு: ஓரிரு வாரங்களில் முடிவு வெளியாகும்

ஓட்டுநர் - நடத்துநர் பணியில் 3,274 காலி இடங்களுக்கு தேர்வு: ஓரிரு வாரங்களில் முடிவு வெளியாகும்
ஓட்டுநர் - நடத்துநர் பணியில் 3,274 காலி இடங்களுக்கு தேர்வு: ஓரிரு வாரங்களில் முடிவு வெளியாகும்

சென்னை: போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர் - நடத்துநர் பணியில் காலியாக உள்ள 3,274 இடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி அளவுக்கு தேர்வு தேர்வு கடினமாக இல்லை என்று தேர்வர்கள் கூறினர். ஓரிரு வாரங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் விரைவு போக்குவரத்து கழகத்தில் 318, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 361 மற்றும் கோட்ட வாரியாக விழுப்புரம் 322, கும்பகோணம் 756, சேலம் 486, கோவை 344, மதுரை 322, திருநெல்வேலி 362 என மொத்தம் 3,274 ஓட்டுநர் உடன் நடத்துநர் (டிசிசி) பணியிடங்கள் காலியாக உள்ளன.

22 ஆயிரம் பேர் விண்ணப்பம்: இந்த இடங்களுக்கு www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் கடந்த மார்ச் மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் பங்கேற்க 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். இதுதவிர, மாவட்டம்தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்தும் தகுதியான நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் 15 மையங்களில் இதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. கட்டாய தமிழ் மொழி தகுதி, பொது அறிவு, தொழில்முறை திறனறி தேர்வு என 3 பிரிவுகளில் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி அளவுக்கு தேர்வு கடினமாக இல்லை என்று தேர்வர்கள் கூறினர். நேர்காணல் இன்றி பணியாளர்களை தேர்வு செய்தால்தான் நியமனத்தில் முழுமையான வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த முறை போலவே, ஓரிரு வாரங்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து, அடுத்தடுத்த நடைமுறைகளை விரைந்து முடிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.

தேர்வர்கள் மையத்துக்கு வந்து செல்லும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.