திருச்செந்தூரில் திருப்பணிகள் முடியும் முன்பே கும்பாபிஷேக விழா - ரூ.300 கோடி திட்டப் பணிகள் இனி?

பெருந்திட்ட வளாகப் பணிகள் முடியும் முன்பே திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்துள்ள நிலையில் ரூ.300 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொய்வின்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்
திருச்செந்தூர் கோயிலில் உண்டி யல் காணிக்கை மூலம் மாதந் தோறும் கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இவை தவிர அன்ன தானம், கோசாலை பராமரிப்புக்காக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ள உண்டியல்களிலும் பக்தர்கள் காணிக்கை இடுகின்றனர். மேலும், அன்னதானத்துக்கு நன்கொடை செலுத்துவதற்காக அமைக்கப்பட் டுள்ள பிரத்யேக கவுன்ட்டரிலும் பக்தர்கள் நன்கொடை செலுத்தி ரசீது பெறுகின்றனர். இவற்றின் மூலம் மாதந் தோறும் கோடிக் கணக்கில் வருவாய் வந்த போதும் பக்தர் களுக்கான வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை என்பது பெருங்குறையாக இருந்தது.
திருச்செந்தூர் கோயிலில் ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கிய ரூ.200 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணிகளை அறநிலையத்துறை மேற் கொண்டுள்ளது. கோயில் நிதி ரூ.100 கோடியில் கோயில் திருப் பணிகள் தனியாக நடைபெற்று, கும்பா பிஷேகம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, வரிசை கவுன்ட்டர், முடி காணிக்கை மண்டபம், சுகாதார வளாகம் உள்ளிட்ட பணிகள் மட்டுமே முடிவுற்றுள்ளன. நாழிக்கிணறு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான நிழற்கூடம் அமைத் தல், தேவையான இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட பல பணிகள் இன்னும் நடைபெறவில்லை
.திருப்பணிகளுக்கு பிற்கு ரூ.100 கட்டண தரிசையில் வரும் பக்தர்கள் கோயிலின் வடக்கு பிரகாரத்தில் உள்ள வாசல் வழியாகவே அனுமதிக்கப்படு கின்றனர். இதற்கான கவுன்ட்டர்கள் நெருக்கமாக உள்ளன. மின்விசிறி கள் அமைக்கப்படாததால் பக்தர்கள் தவிக்கின்றனர். இலவச தரிசனத்துக் கான காத்திருப்பு அறையில் மின்விசிறிகள் உள்ளன. ஆனால், கவுன்ட்டர்களில் மின் விசிறிகள் எதுவும் இல்லை. மூலவரை தரிசனம் செய்த பிறகு பக்தர்கள் வலப்புறமாக சென்று கோயில் பிரகாரத்தில் உள்ள மற்ற தெய்வங்களின் சந்நிதிகளை தரிசிக்க முடியாமல் தடுப்பு போட்டு அடைத்து வைக்கின்றனர்.
பிரதான வழியாகச் சென்று தரிசனம் செய்த பின்னர் அதே வழியாகவே பக்தர்கள் வெளியே வருவதற்கான நடைமுறைக்கு திருச்செந்தூர் கோயிலில் அதிகாரிகள் முட்டுக் கட்டை போடுவது நியாயமா? என பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர். பெருந்திட்ட வளாகப் பணிகள் முடிவடைந்தால் திருப்பதி கோயிலுக்கு இணையாக பக்தர்களுக்கான வசதிகள் கிடைக்கும் என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கடி கூறி வருகிறார். இதை நிறைவேற்றும் விதமாக பணிகளை எவ்வித புகாருக்கும் இடமின்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் கானா பாடகர் வேல்முருகனுடன் சேர்ந்து முருகன் பக்தி பாடல்களை பாடினர்.
வழி தெரியாமல் தவித்த பக்தர்கள்: திருச்செந்தூரில் நாலாபுறமும் வழிகள் மறிக்கப்பட்டதால் கோயிலுக்கு செல்ல வழி தெரியாமல் பக்தர்கள் தவித்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு சுமார் 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என தெரிவிக்கப் பட்டது. கோயில் வளாகத்தில் யாரையும் அனுமதிக்க கூடாது என்பதற்காக கோயிலை சுற்றி நாலாபுரமும் பேரிகார்டுகள் வைத்து காவல் துறையினரால் மறிக்கப்பட்டது.
இதனால் வெளியூர்களில் இருந்து திருச்செந்தூருக்கு வந்த பக்தர்கள் எந்தவழியாக கோயில் அருகே செல்வது என்பது தெரியாமல் தவித்தனர். இதற்கிடையே, நேற்று காலையில் கோயில் விமான தளத்தில் சுமார் 2,500 பேரும், தரைதளத்தில் ஆயிரக்கணக்கானோரும் எளிதாக வலம் வந்தனர்.
கும்பாபிஷேக விழாவுக்காக அறநிலையத்துறை சார்பில் 310 சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும், கோயில் வளாகத்தில் முக்கிய விஐபிகள், திமுகவினர் உட்பட பலர் எந்த கெடுபிடியும் இன்றி உள்ளே சென்றனர். பத்திரிகையாளர்கள் கோயில் விமான தளத்துக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
பத்திரிகையாளர்கள் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கும்பாபிஷேகத்தை படம் எடுக்க முடியாதவாறு முடக்கப்பட்டனர். மேலும், பத்திரிகையாளர்களுக்கென பக்தர்கள் வரிசையாக செல்லும் இடத்தின் மேல் பகுதியை ஒதுக்கி இருந்தனர். ஆனால், அங்கு பத்திரிகையாளர்கள் பணி செய்ய முடியாதபடி ஏராளமானோர் திரண்டிருந்தனர்