போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு

சென்னை: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு ஜாமீன் கோரிய மனு மீது உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக கடந்த மாதம் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோரை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான பிரதீப்குமார் என்பவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீகாந்தை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து எந்தவொரு போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை என்றார்.
வாதங்கள் நிறைவு: நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பண்ட் தினேஷ் வாதிடும்போது, இந்த வழக்கில் போலீஸார் அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜரான நிலையில் கிருஷ்ணாவை கைது செய்துள்ளனர். கைதுக்கான காரணங்கள் எதையும் முறைப்படி தெரிவிக்கவி்ல்லை. அவரிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என்றார்.
அதற்கு அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.வினோத்ராஜா, நுங்கம்பாக்கம் மதுபான பாரில் நடந்த பிரச்சினையில் கொலை முயற்சி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கும் மற்றவர்களுக்கும் இருந்த போதைப்பொருள் பழக்கம் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரவீன்குமார் கைது செய்யப்பட்டார்.
பிரவீன்குமார் அளித்த வாக்கு மூலத்தின்படி ஸ்ரீகாந்த் கடந்த ஜூன் 23-ம் தேதியும் கிருஷ்ணா ஜூன் 26-ம் தேதியும் கைது செய்யப்பட்டனர் என்றார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எம்.நிர்மல்குமார் அறிவித்துள்ளார்