நம்பகத்தன்மை மிக்கது அச்சு ஊடகங்களே..! எம்எஸ்

புதுடெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்று ஏற்பாடு செய்திருந்த வட்டமேஜை விவாதத்தில் பங்கேற்ற மத்திய ரயில்வே, செய்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘இன்றைக்கு இருக்கும் அனைத்து ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களே நம்பகத்தன்மை மிக்கதாக உள்ளன,’’ என்று குறிப்பிட்டிருப்பது முற்றிலும் உண்மை. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு உண்மையான செய்திகளை கொண்டு சேர்ப்பதில் அச்சு ஊடகங்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறைக்கும் கடின உழைப்புக்கும் கிடைத்துள்ள பாராட்டுச் சான்றாக மத்திய அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது.
செய்திகளை மக்களிடம் வேகமாக கொண்டு சேர்ப்பதிலும், எளிமைப்படுத்தியதிலும் சமூக வலைதளங்களின் பணியை மறுக்க முடியாது. அதேசமயம், மக்களிடம் சென்றடையும் அனைத்து விஷயங்களும் உண்மைதானா, எந்தளவுக்கு நம்பகத்தன்மையுடன் கூடியது என்பதை சமூக வலைதளங்கள் சரிபார்ப்பதில்லை. அதற்கான கட்டமைப்பும் அவர்களிடம் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
உண்மையை திரித்து வெளியிடுதல், உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாக பரப்புதல், பிரபலங்களின் அந்தரங்க விஷயங்கள் குறித்து அவதூறுகளை பரப்புதல், மருத்துவம் உள்ளிட்ட துறை சார்ந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே தெரிவிக்க வேண்டிய விஷயங்களை அதைப்பற்றி தெரியாதவர்கள் கூட பேசி வெளியிடுதல், அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளைப் போன்றே போலியான ஆவணங்களை தயாரித்து உண்மையைப் போல் பரப்புதல் என எந்த கட்டுப்பாடுகளுமின்றி சமூக ஊடகங்கள் இயங்குவது வருத்தத்திற்குரியது.
இதற்கு மாறாக, அச்சு ஊடகங்கள் ஆர்என்ஐ என்ற மத்திய அமைப்பின் அங்கீகாரம் பெற்று சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, சமூக பொறுப்புணர்வுடனும் கட்டுப்பாடு காத்தும் செய்திகளை ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கின்றன. சமூக ஊடகங்கள் கூடுதல் பொறுப்புணர்வு மிக்கதாக செயல்பட வேண்டும் என்ற கருத்தை ஜி20 உள்ளிட்ட உலக நாடுகளின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களும் தெரிவித்து வருவதாகவும், நாடாளுமன்ற நிலைக்குழு உள்ளிட்ட உறுப்பினர்களும் இதே கருத்துடன் இருப்பதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்தொற்றுமை ஏற்பட்டால், உரிய சட்ட திருத்தங்களை மேற்கொண்டு சமூக ஊடகங்களை பொறுப்புமிக்கதாக மாற்றத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளதுபாராட்டுக்குரியது. சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் கருத்துகளால் நாட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிப்பதாகவும், அதை தடுத்து நேர்மறை சமூகத்தை உருவாக்க இதுபோன்ற மாற்றங்கள் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சர் தெரிவித்திருப்பதைப் போல், கட்டுப்பாடுகள் கொண்டு வர முற்பட்டால் பேச்சு சுதந்திரம் பறிபோவதாக சிலர் எதிர்ப்பு குரல் எழுப்ப வாய்ப்பு ஏற்படும். அச்சு ஊடகங்கள் நாட்டின் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட்டு, அனைத்து ஒழுக்க நெறிமுறைகளையும் பின்பற்றி பேச்சு சுதந்திரத்தை கட்டிக் காத்து செய்திகள் வெளியிடும்போது, அதே விதிகளைப் பின்பற்றி சமூக ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் பொதுமக்களின் கருத்துகளை வெளியிட நிர்பந்திப்பதில் எந்த தவறுமில்லை.