தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்
தமிழகம் வரும் பிரதமரிடம் மாநில அரசு சார்பில் மனு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

சென்னை: ‘தமிழகம் வரும் பிரதமரிடம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்குவார்’ என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கோரிக்கை மனுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த மனு பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது.

இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோரிக்கை மனு அளித்திட, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (26.7.2025) தலைமைச் செயலாளர் நா. முருகானந்தத்திடம் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்த மனுவினை தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமரிடம் அளிக்க உள்ளார். இந்நிகழ்வின்போது, மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் முதல்வரின் செயலாளர்கள் உடனிருந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், ‘மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமரிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.

தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமரிடம் இந்த மனுவை வழங்குவார்’ எனத் தெரிவித்துள்ளார்.