சர்வதேச விண்வெளி மையம் நாளை வானில் தெரியும்.. சென்னையில் இருந்தே பார்க்கலாம்! எந்த டைம் தெரியுமா?

சென்னை: பூமியில் இருந்து 400 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை நாளை முதல் இந்தியாவில் இருந்து பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் இந்த விண்வெளி ஆய்வு மையத்தை எந்த நேரத்தில் பார்க்கலாம் என்பது பற்றிய விவரங்களும் வெளியாகியுள்ளன.
விண்வெளி வீரர்கள் விண்ணில் தங்கி ஆய்வு செய்ய ஏதுவாக கடந்த 1998 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையம் நிறுவப்பட்டது. பூமியை சுற்றி வரும் பெரிய விண்கலமாக இது செயல்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு மையங்களின் கூட்டு முயற்சியாக இந்த சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது.
பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது ஒரு முறை பூமியை சுற்றுவதற்கு 90 நிமிடங்கள் என ஒருநாளைக்கு 16 முறை சுற்றுகிறது. இதனால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், தினமும் 16 முறை சூரிய உதயத்தையும், அஸ்தமனத்தையும் பார்க்க முடியும்
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் தற்போது இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்பட 4 வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் அமெரிக்காவை சேர்ந்த கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியை சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி ஆய்வில் ஈடுபட்டு இருக்கிறார்கள்
இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியை சுற்றி வரும் போது சில நேரங்களில் வெறும் கண்ணால் பார்க்கலாம். இந்த மையத்தை எந்த பகுதி மக்கள் பார்க்கலாம் என்பதனை நாசா தெரிவித்து வருகிறது. அந்த வகையில் நாளை முதல் 12 ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் விண்ணில் வலம் வரும் விண்வெளி மையத்தை பார்க்க முடியம்.
நாளை காலை 5 மணியளவில் வங்கதேசத்தை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளில் தெரியும். பிறகு, இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூர், ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்க முடியுமாம்.
10 ஆம் தேதி காலை
இரவு 9.38 மணி முதல் 9.41 மணி வரை பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள இந்திய பகுதிகளில் இருந்து பார்க்கலாம். மீண்டும் 10 ஆம் தேதி காலை 4.58 மணி முதல் 5.06 மணி வரை சென்னையில் பார்க்கலாம். சர்வதேச விண்வெளி நிலையம், அதிவேகத்தில் செல்வதால் ஓரிரு நொடி மட்டுமே விண்ணில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அன்னே மெக்லைன், நிக்கோல் அயர்ஸ், ஜானி கிம், ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மஸ் விண்வெளிப் பயணிகள் கிரில் பெஸ்கோவ் உள்ளிட்டோர் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
14 நாள்கள் சர்வதேச விண்வெளி நிலைய பயணம் முடிந்த பிறகு, க்ரூ டிராகன் C213 மூலம் பூமிக்கு திரும்ப உள்ளனர். சுமார் 17 முதல் 20 மணி நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள்.