விஏஓ பவர்ஃபுல் அதிகாரம்.. கிராம ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம்?

சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிராம ஊராட்சிகளில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து எஸ்டிபிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது.. கிராமப்புற மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.. என்ன நடந்தது?
கிராம ஊராட்சிகளில், முறைகேடாக, அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க, ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.. அதில், முத்திரை இடும் அதிகாரம் ஊராட்சிகளின் நிர்வாக அலுவலருக்கு இருப்பதாகவும் கூறியிருந்தது,..
கட்டுமானங்கள் - அனுமதி
அந்தவகையில், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டிருந்தன..
அதில், ஒற்றை சாளர முறையில் வெப்சைட் ஒன்றினை உருவாக்கி, அதில் கட்டிட அனுமதியை மூன்று வகைகளில் வழங்கவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சுயசான்றின் அடிப்படையில், 2500 சதுர அடியிலிருந்து மனையில், 3000 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டுமானங்களைக் கட்டிக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
கட்டிட வரைபடங்கள் ஆவணங்கள்
கட்டிடத்தின் பரப்பளவு 10,000 சதுர அடிக்கு கீழ் உள்ள பட்சத்தில் அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடம், வெப்சைட்டின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இக்கட்டிட வரைபடங்களின் ஆவணங்கள் உரிய அலுவலர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கட்டிட வரைபட அனுமதி இணைய தளம் மூலம் வழங்கப்படுவதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் அலி இதுதொடர்பான கவலையை வெளிப்படுத்தி, அரசுக்கு ஒரு கோரிக்கையைய்ம விடுத்துள்ளார்.. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஊராட்சி நிர்வாக அலுவலர்கள்
"தமிழ்நாடு அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிராம ஊராட்சிகளில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் அதிகாரத்தை ஊராட்சி நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கட்டிட விதிமீறல்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, கிராமப்புற மக்களின் நிலைமைகளை முழுமையாகக் கருத்தில் கொள்ளாமல் அமலாக்கப்படுவது கவலையளிக்கிறது..
நெருக்கடியில் மக்கள்
கிராமப்புறங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களாகவும், படிப்பறிவு குறைந்தவர்களாகவும் உள்ளனர். இவர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப சிறுகச் சிறுக சேமித்து, சிக்கலான அனுமதி நடைமுறைகளைப் புரிந்து கொள்ள இயலாமல், தங்கள் இடங்களில் வீடுகளைக் கட்டுகின்றனர். இத்தகைய சூழலில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைப்பது, ஏற்கனவே வறுமையில் வாழும் மக்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இத்தகைய அதிகாரத்தை அளிப்பது தவறானது. இது கீழ் நிலையிலேயே ஊழலுக்கும், அதிகார துஷ்பிரயோகத்துக்கும் வழிவகுக்கும். குறைந்தபட்சம் மாவட்ட நிர்வாகம் அல்லது மாவட்ட அளவிலான அதிகாரம் கொண்டவர்களிடம் இந்தப் பொறுப்பு அளிக்கப்பட வேண்டும். இதனால், முடிவுகளில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் உறுதி செய்யப்படும்.
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, அரசு விதிமுறைகளை எளிமையாக விளக்கி, அனுமதி பெறுவதற்கு உதவும் விழிப்புணர்வு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் குறைந்த செலவில் வீடு கட்டுவதற்கு மானியங்கள், எளிமையான அனுமதி நடைமுறைகள் ஆகியவற்றை வழங்கினால், மக்களின் நலன் பாதுகாக்கப்படும்..
லஞ்சம், பழிவாங்கல்
ஆனால், மக்கள் நட்பு அணுகுமுறைகளை மேற்கொள்ளாமல், ஊராட்சி அலுவலர்களுக்கு ஒருதலைப்பட்சமாக சீல் வைக்கும் அதிகாரத்தை வழங்குவது, லஞ்சம் மற்றும் பழிவாங்கல் போன்ற தவறான நடைமுறைகளுக்கு வழிவகுக்கலாம். இது கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலாக்கும்.
எனவே, அரசு கிராமப்புற மக்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஆதரவான, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும். இதன்மூலம், விதிமுறைகளை அமல்படுத்துவதற்கும் மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் இடையே சமநிலை ஏற்படுத்த முடியும். ஆகவே, தமிழக அரசு மேற்கண்ட முடிவை ரத்து செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.