சேலம் டூ புதுச்சேரி.. பிரபல தங்க நகை பட்டறை அதிபரின் ஒரு நிமிட தவறு.. ஒரு கோடி ரூபாய் காலி...

புதுச்சேரி: புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்த தீபக்தாஸ் என்பவர் தங்க நகை தயாரிக்கும் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தான் புதுச்சேரியின் பல்வேறு பிரபல நகைக்கடைகளுக்கு தங்க நகைகள் செய்து கொடுத்து வந்துள்ளார். இவரிடம் ஒரு நபர் வித்தியாசமான முறையில் ஏமாற்றி ஒரு நிமிடத்தில் ஒரு கோடி சம்பாதித்துள்ளார். எப்படி சாத்தியமானது.. அவரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.. என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்...
தங்க நகை மற்றும் தங்க கட்டிகளை வாங்கும் போது சற்று கவனம் சிதறினாலும் மொத்த பணமும் போய்விடும்.. ஏனெனில் போலி நகைளை கொடுத்து ஏமாற்ற வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் தங்கத்திற்கு பதிலாக செம்பு கட்டிகள் கொடுத்து பட்டறை உரிமையாளரிடம் ரூ.1 கோடி நகைகளை மோசடி நடந்துள்ளது. ஒரு சில நிமிடங்களில் டிப் டாப் ஆசாமி ஒருவர் தங்கக்கட்டி என்று செம்பு கட்டிகளை கொடுத்து ஏமாற்றி உள்ளார்...
புதுச்சேரியில் நகைப்பட்டறை
புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்த 50 வயதாகும் தீபக்தாஸ் என்பவர் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் தங்க நகை தயாரிக்கும் பட்டறை ஒன்றை வைத்திருக்கிறார். அங்கிருந்தபடிதான் தீபக்தாஸ், புதுச்சேரியில் உள்ள உள்ள பிரபல நகை கடைகளுக்கு நகைகள் செய்து கொடுத்து வந்துள்ளார். புதுச்சேரியின் பல்வேறு நகைக்கடைளுக்கு இவர் தங்க நகை செய்து தருகிறார்..
சேலம் டூ புதுச்சேரி
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க டிப்-டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர், தீபக்தாசிடம், தன்னுடைய பெயர் சந்தீப்ஜனா என்று அறிமுகம் செய்து கொண்டார். தான் சேலத்தில் இருந்து வருவதாகவும், அங்கு நகை கடை வைத்துள்ளேன் என்றும் கூறியிருக்கிறார். பின்னர் அவர், உருக்கிய நிலையில் இருந்த 60 கிராம் தங்க கட்டியை கொடுத்து அதற்கு நிகரான நகைகளை தீபக்தாசிடம் வாங்கிச்சென்றார். மேலும் அவரது செல்போன் எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டார். 2-வது முறையாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் புதுச்சேரியில் வந்து, தீபக்தாசிடம் 20 கிராம் தங்க கட்டியை கொடுத்து அதற்கு நிகரான ஆபரண நகையை வாங்கிச்சென்றுள்ளார்...
தங்க கட்டிகள்
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தீப்ஜனா செல்போன் மூலம் தீபக்தாசை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது 40 கிராம், 30 கிராமில் 1 கிலோ எடையில் ஆபரண நகைகள் வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி தீபக்தாஸ் நகைகளை தனது பட்டறையில் தயாரித்து வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சந்தீப்ஜனா, வழக்கத்துக்கு மாறாக டிப்-டாப் அணிந்தும் தலையில் தொப்பு மற்றும் முகத்தில் முகக்கவசம் அணிந்து பட்டறைக்கு வந்திருக்கிறார். இதுபற்றி தீபக்தாஸ் கேட்டபோது, தனக்கு சளி, இருமல் இருப்பதாகவும், இதனால் முகக்கவசம் அணிந்திருப்பதாகவும் கூறினாராம்.....
செம்பு கட்டிகள்
இதன்பிறகு தீபக்தாஸ், அந்த கட்டிகளை பட்டறை ஊழியரிடம் கொடுத்து பரிசோதித்துள்ளார். அப்போது தான் அது செம்பு கட்டிகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மற்றும் ஊழியர்கள் பட்டறையில் இருந்து வெளியே ஓடி வந்து சந்தீப்ஜானாவை தேடியிருக்கிறார்கள். இதற்குள் சந்தீப்ஜனா மாயமாகிவிட்டார். மேலும் அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச் ஆப் ஆகிஇருந்தது.
புதுச்சேரி போலீஸ்
இந்த மோசடி தொடர்பான புகாரின் பேரில் போலீசார் நகை பட்டறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அந்த நபர் புதுச்சேரியிலேயே பதுங்கி உள்ளாரா என்று நகர் முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் டிப்-டாப் ஆசாமி சிக்கவில்லை. உண்மையில் மோசடி நபரின் பெயர் சந்தீப்ஜனாதானா? அவர் சேலத்தை சேர்ந்தவரா? இதேபோல் வேறு எங்கும் கைவரிசை காட்டினாரா? யார் இவர் என்று தீவிரமாக தேடி வருகிறார்கள்.. நம்பிக்கையின் அடிப்படையில் நகைப்பட்டறை உரிமையாளர் நடந்ததற்கு ஒரு கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது...