15000 பணம் அக்கவுண்டிலேயே விழப்போகுது.. மத்திய அரசின் மெகா திட்டம்.. சென்னை பிஎஃப் அதிகாரி விளக்கம்

சென்னை: மத்திய அரசின் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்புநிதி கமிஷனர் விளக்கம் அளித்துள்ளார். முதன்முறையாக வேலையில் சேரும் ஊழியர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் (அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை) 2 தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை 6 மாத வேலைக்கு பின்னரும், 2-வது தவணை 12 மாத வேலைக்கு பின்னரும் வழங்கப்படும். கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.
நமது நாட்டின் வேலைவாய்ப்பை அதிகரிக்கப்பதற்கு உற்பத்தி துறை ஊக்குவிக்க வேண்டும்.அதற்காக மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து உற்பத்தி சார்ந்த துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம் கடந்த 2024-25 பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டப்படி அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு திட்டம்
இந்ததிட்டப்படி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஊக்கத்தொகைகளை வழங்க போகிறது மத்திய அரசு. முதல் முறையாகப் பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாத ஊதியம் ரூ.15,000 வரை கிடைக்கும். அதேபோல், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் உரிமையாளர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. உற்பத்தித் துறைக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படஉள்ளது. 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை எளிதாக்கும் 5 திட்டங்களின் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மொத்த பட்ஜெட் ரூ.2 லட்சம் கோடி என்று அரசு அறிவித்துள்ளது
.சென்னை அதிகாரி
சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் ரேணு ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனைத்து துறைகளிலும், குறிப்பாக உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கவும், வேலைதிறன் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்தவும் 'வேலைவாய்ப்பு இணைப்பான ஊக்கத்தொகை' (இ.எல்.ஐ.) திட்டத்தை அங்கீகரித்துள்ளது.
எப்படி கிடைக்கும்
முதன்முறையாக வேலையில் சேரும் ஊழியர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் (அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் வரை) 2 தவணைகளில் வழங்கப்படும். முதல் தவணை 6 மாத வேலைக்கு பின்னரும், 2-வது தவணை 12 மாத வேலைக்கு பின்னரும் வழங்கப்படும். அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ரூ.1,000 முதல் ரூ.3 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தி துறைக்கு இது 3 மற்றும் 4-ம் ஆண்டுகளிலும் நீடிக்கப்படும்.
3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். 1.92 கோடி முதல்முறை ஊழியர்கள் இந்த திட்டத்தால் பயனடைவார்கள். இந்த திட்டம் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2027 ஜூலை 31-ந்தேதி வரை பணியில் சேரும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இதுதொடர்பாக மேலும் தகவல்களை பெற மண்டல வருங்கால வைப்புநிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது