2025கன்னியாகுமரி: வரதட்சணை கொடுமைக்கு இளம்பெண் பலியானதாக உறவினர்கள் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியில் இளம்பெண் ஜெபிலா மேரி(26), ஜூலை 5ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து தங்கள் மகளைக் கூறி நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பலதா. இவர் மேல்மிடாலம் பகுதியைச் சேர்ந்த நிதின் ராஜ் என்பவருக்கு செவிலியரான தனது மகள் ஜெபிலா மேரியை ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதுகுறித்துப் பேட்டியளித்த உயிரிழந்த பெண்ணின் தாயார் புஷ்பலதா, "இந்த நிலையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு வரதட்சணையாக 7 லட்சம் ரூபாய் ரொக்க பணம் 50 சவரன் தங்க நகை இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை, இருசக்கர வாகனம் ஐம்பது லட்சம் ரூபாய்க்கு வீடு உள்பட சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வரதட்சணையாக அளித்ததாக" என்று தெரிவித்தார்.
மேலும், "நேற்று மதியம் திடீரென பெண் வீட்டிற்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அதில் ஜெபிலா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். ஜெபிலா தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்" என்று புஷ்பலதா கூறினார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் மகளை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகவும், பெண்ணைக் கொலை செய்ததாகவும் குற்றம்சாட்டி, "பெண்ணின் கணவர் நிதின் ராஜ் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்" என உயிரிழந்த பெண்ணின் தாய் கண்ணீர் மல்கப் பேட்டி அளித்தார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கருங்கல் காவல் நிலைய ஆய்வாளர் "தற்போது சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடற்கூறாய்வு முடிந்து அறிக்கை கிடைத்த பின்னர் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அந்தக் கோணத்தில் விசாரணையை தொடங்கவுள்ளோம்" என்று தெரிவித்தார்.