முன்னர்புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த ஈலோன் மஸ்க்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பிளவுக்கு சில வாரங்கள் கழிந்த நிலையில், தான் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ‘அமெரிக்கா கட்சி’ (America Party) என்பதை தான் நிறுவியுள்ளதாக மஸ்க் அறிவித்துள்ளார். குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி என இருகட்சி சார்ந்த அமெரிக்காவின் அரசியலுக்கு இக்கட்சி சவால் விடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்க தேர்தல் ஆணையத்துடன் இந்த கட்சி அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. இந்த கட்சியின் அமைப்பு என்னவாக இருக்கும், யார் இக்கட்சிக்கு தலைமை வகிப்பார் என்ற தகவல்களை மஸ்க் வழங்கவில்லை.
டிரம்புடனான வெளிப்படையான சச்சரவுக்குப் பிறகு புதிய கட்சி தொடங்குவது குறித்த சாத்தியத்தை மஸ்க் வெளிப்படுத்தி வந்தார்.
2024 தேர்தலில் டிரம்புக்கு மிக முக்கிய ஆதரவாளராக மஸ்க் இருந்தார், அவரது வெற்றிக்காக 250 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு அரசு நிர்வாகத்தின் செலவுகளை குறைக்கும் பொருட்டு டிரம்ப் அமைத்த DOGE (Department of Government Efficiency) எனும் துறையின் தலைவராக மஸ்க் நியமிக்கப்பட்டார். பட்ஜெட்டில் நிதி குறைப்புகளை அடையாளம் காண்பதே இத்துறையின் வேலையாகும்.
இந்த துறையின் தலைவர் பொறுப்பிலிருந்து மஸ்க் மே மாதம் விலகியதிலிருந்து இருவருக்கு இடையேயான பிளவு ஆரம்பித்தது, டிரம்பின் வரி மற்றும் செலவு திட்டங்களை மஸ்க் வெளிப்படையாகவே விமர்சித்து வந்தார்.