செங்கல் உற்பத்தி நின்றதால் 3 லட்சம் பேர் பாதிப்பு - இ.பி.எஸ்.யிடம் முறையிட்ட விவசாயிகள்

கோவை, தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்..
தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.
சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டத்தில் தொடங்கினார்.
அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி வன பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு, தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, வேளாண் மக்களின் உறுதுணையோடு தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் விவசாயிகள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார்.
அப்போது அவரிடம் பேசிய விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் சிலர் வழக்குப்போட்டு செங்கல் சூளையை மூட வைத்ததாக முறையிட்டனர்.
செங்கல் உற்பத்தி நின்றதால் விறகு வியாபாரம் செய்ய முடியாமல், 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாங்கள் முதலமைச்சரானதும் செங்கல் சூளை தொழிலை மீண்டும் இயக்க ஆவன செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சட்டத்துக்கு உட்பட்டு செங்கல் சூளைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.