பிரபல செல்போன் நிறுவனத்தின் போலி உதிரிபாகங்கள் விற்பனை - 4 பேர் கைது

பிரபல செல்போன் நிறுவனத்தின் போலி உதிரிபாகங்கள் விற்பனை - 4 பேர் கைது
போலி உதிரி பாகங்களை மும்பையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.;

பிரபல செல்போன் நிறுவனம் சார்பில் சென்னை அமலாக்கப்பிரிவு அறிவுசார் சொத்துரிமை போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச் தெருவில் எங்கள் நிறுவனத்தின் செல்போன் உதிரி பாகங்கள் போலியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனை தடுத்து நிறுத்தி போலி உதிரி பாகங்களை விற்கும் வியாபாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இந்த பிரிவின் கூடுதல் டி.ஜி.பி. அமல்ராஜ் உத்தரவின் பேரில் ஐ.ஜி.செந்தில்குமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண்கோபாலன் ஆகியோர் அறிவுறுத்தல்படி, இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்குப்பதிவு செய்து, ரிச் தெருவில் அதிரடி சோதனை வேட்டையில் இறங்கினார். இதில் பிரபல செல்போன் நிறுவனத்தின் பெயரில் போலி உதிரி பாகங்களை விற்ற நிதேஷ்ஜெயின் (வயது 35), ரமேஷ்குமார் (32), உத்தம்குமார் (38), ஜெதாராம் (26) ஆகிய 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான போலி செல்போன் பாகங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், போலி பாகங்களை மும்பையில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.