மராட்டியத்தை சுழன்றடித்த சூறாவளி போராட்டம்': இந்தி திணிப்புக்கு எதிராக கைகோர்த்த உத்தவ் - ராஜ் தாக்கரேவுக்கு ஸ்டாலின் வரவேற்பு

ஆரம்பப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்துவதற்கான மகாராஷ்டிரா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து நடந்த பேரணியின் போது உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக ஒரு அரசியல் மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.
வெகுநாட்களாகப் பிரிந்திருந்தவர்களான உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் சனிக்கிழமை அன்று மும்பையில் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மேடையைப் பகிர்ந்துகொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, "இந்தி திணிப்பைத் தோற்கடிக்க" அவர்களின் இந்த இணைவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
அந்தப் பொதுக்கூட்டத்தில், சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) தலைவரும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவரும், மகாராஷ்டிராவில் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தும் விதமாக, தற்போது ரத்து செய்யப்பட்ட, பாஜக தலைமையிலான மகாயுதி அரசின் முடிவை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.
இந்த நிலைப்பாட்டை வரவேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் கூறியதாவது, "இந்தி திணிப்பைத் தோற்கடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திய மொழி உரிமைப் போராட்டம், இப்போது மாநில எல்லைகளைத் தாண்டி மகாராஷ்டிராவில் ஒரு போராட்டப் புயலாகச் சுழன்றடிக்கிறது."
ஸ்டாலின் மேலும் கூறுகையில், "இந்தி திணிப்புக்கு எதிராக, இன்று மும்பையில் சகோதரர் உத்தவ்தாக்கரே தலைமையில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தின் உற்சாகமும், ஆற்றல் மிக்க சொற்பொழிவும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது" என்றார்.