ஐடி துறையில் ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. எதிர்காலத்தில் யாருக்கெல்லாம் வேலை பறிபோகும்

தகவல் தொழில்நுட்பத் துறை (IT - Information Technology) என்பது கணினி, மென்பொருள், இணையம் மற்றும் தரவுகள் மூலம் தகவல்கள் அனைத்தையும் நிர்வகித்து, பகிர்ந்து, பாதுகாக்கும் தொழில்நுட்பம் ஆகும். இந்த துறை இன்று உலகின் மிக முக்கியமான மற்றும் வேகமாக வளரும் துறையாக உள்ளது. இந்த துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகம், சம்பளமும் அதிகம். மாணவர்கள் பெரும்பாலும் இந்த துறையில் விருப்பம் காட்டுவதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த சூழலில், இன்று ஐடி துறையின் ஒவ்வொரு பகுதியிலும் ஏஐ நுழைந்துள்ளது. மென்பொருள் கோடிங் முதல், தரவுப் பகுப்பாய்வு, வாடிக்கையாளர் சேவை வரை பல்வேறு நிலைகளில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏஐ உதவியுடன் சிக்கலான கணக்கீடுகள், தரவுப் பகுப்பாய்வுகள் மற்றும் சோதனைகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்படுகிறது. பணியாளர்கள் மேற்கொள்ளும் பல வழக்கமான வேலைகளை ஏஐ தானாகவே செய்கிறது. இது நிறுவனங்களின் செலவைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஆனால், பல கட்டங்களில் ஏஐ ஆனது, மனிதர்களுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுவதால், வேலைவாய்ப்பு குறைகிறது. இதனால், பல இடங்களில் பலர் வேலையையும் இழந்துள்ளனர். மேலும், இது மனித தொடர்பை மாற்றுவதால், உணர்வுப் பூர்வமான சேவைகள் குறைய வாய்ப்பு உள்ளது. ஏஐ ஒரு சக்திவாய்ந்த கருவி. ஆனால் அதைப் பயன்படுத்தும் நபரின் நோக்கத்தைப் பொருத்தே அதன் விளைவுகள் அமையும்.
இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் கடந்த 2019-25 காலகட்டத்தில் பெரிய ஐடி நிறுவனங்களில் புதிய பணியாளர்களை வேலைக்கு எடுப்பது என்பது 50% குறைந்துள்ளது. கோடிங், டெஸ்டிங் போன்ற வேலைகளை ஏஐ வேகமாக செய்துவிடுவதால், junior engineers-க்கு வாய்ப்புகள் குறைகின்றன.
AI மெஷின்கள், chatbot-களை வடிவமைப்பது, பெரிய தரவுகளை ஆய்வு செய்வது போன்ற வேலைகள் அதிகமாகின்றன. Developer ஒருவர் 8 மணி நேரத்தில் செய்யும் வேலையை, AI இரண்டே மணி நேரத்தில் செய்து விடுகிறது. ஏஐ வருகையால் எதிர்காலத்தில் யாருக்கு பாதிப்பு..?: ஐடி துறையில் கோடிங், டெஸ்டிங் உள்ளிட்ட வழக்கமான வேலைகள் ஏஐ, குறைந்த நேரத்தில் முடித்து விடுகிறது.
எனவே, இவை மீது நம்பிக்கையுடன் இருந்த பல இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் குறையும் அபாயம் உள்ளது. அதேபோல் வாடிக்கையாளர் சேவை, டெலிகாலிங் போன்ற பணி AI chatbot-க்கள் மற்றும் voice assistants மூலம் தானாகவே நடைபெறுகிறது. இதனால், இத்துறையிலும் வேலை வாய்ப்புகள் குறையக் கூடும். மேலும் வங்கிகளில் கணக்குகள் பரிசீலனை, கடன் வழங்கல், கடவுச்சொல் சரிபார்ப்பு போன்ற பணிகள், AI மற்றும் automation மூலமாகச் செயல்படத் தொடங்கியுள்ளன.
யாருக்கெல்லாம் பாதிப்பு இல்லை..?: AI உருவாக்கும் நிபுணர்கள், ஆசிரியர்கள், மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள், Leaders, Project managers, Designers, Artists, Story writers உள்ளிட்டோர் ஏஐ வருகையால் நிச்சயம் பாதிக்கப்பட மாட்டார்கள். என்ன செய்ய வேண்டும்..?: AI tools (ChatGPT, Copilot), Data Science, Cloud, Cybersecurity போன்ற புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். AI-யை எதிரியாக பார்க்காமல், உதவியாக பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், AI உங்களை வேலையை விட்டு நீக்காது. ஆனால், பழைய வேலைகளை மாற்றி, புதிய திறன்களுடன் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.