தேசிய விருதாளர்கள் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசிக்கு பாராட்டு! ஏமாற்றமளித்த ஆடு ஜீவிதம்! வைரமுத்து ட்வீட்...

தேசிய விருதாளர்கள் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசிக்கு பாராட்டு! ஏமாற்றமளித்த ஆடு ஜீவிதம்! வைரமுத்து ட்வீட்...
படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றமே என தனது வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார்...

சென்னை: தேசிய திரைப்பட விருதுகளை பெற்ற நடிகர் என்.எஸ்.பாஸ்கர், நடிகை ஊர்வசி உள்ளிட்ட கலைக் கண்மணிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து, ஆடுஜீவிதம், அயோத்தி படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றமே என தனது வருத்தத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது

தேசியத் திரைப்பட

விருதுகள் சிலவெனினும்

பெற்றவரைக்கும் பெருமைதான்

விருதுகளை வென்ற

கலைக் கண்மணிகள்

இயக்குநர்

ராம்குமார் பாலகிருஷ்ணன்,

தயாரிப்பாளர்கள்

சுதன் சுந்தரம் - கே.எஸ்.சினிஷ்

சகோதரர் எம்.எஸ்.பாஸ்கர்,

தம்பி ஜி.வி.பிரகாஷ்,

நடிகை ஊர்வசி,

சரவண மருது,

சவுந்தரபாண்டியன்,

மீனாட்சி சோமன்

ஆகிய அனைவர்மீதும்

என் தூரத்துப் பூக்களைத்

தூவி மகிழ்கிறேன்

இந்த மிக்க புகழைத்

தக்க வைத்துக் கொள்வதற்கு

மேலும் உழைப்பதற்கு

இந்த விருதுகள்

ஊக்கமும் பொறுப்பும்

தருமென்று

உறுதியாய் நம்புகிறேன்

ஆயிரம் சொல்லுங்கள்

ஆடுஜீவிதம், அயோத்தி

விருது பெறாதது

எனக்கு ஏமாற்றம்தான்

இவ்வாறு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் 3 விருதுகளை 'பார்க்கிங்' என்ற திரைப்படம் பெற்றுள்ளது.

அது போல் 'வாத்தி' என்ற திரைப்படத்திற்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி.பிரகாஷ் வென்றார். சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மாஸ்ஸிக்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது வென்ற ராணி முகர்ஜிக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற நடிகர், நடிகைகளுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் நடிகரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசனும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவருடைய வாழ்த்தில் கூறியிருப்பதாவது: 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியில் சிறந்த படம் எனும் பெருமையுடன் சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 விருதுகளை 'பார்க்கிங்' திரைப்படம் வென்றிருக்கிறது...

பார்க்கிங்' திரைப்படத்தைத் தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சினிஷ் ஶ்ரீதரன் மற்றும் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்தரம் இருவருக்கும் வாழ்த்து. திரைக்கதை எழுதி இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன், சிறந்த துணை நடிகர் விருதை வென்றிருக்கும் தம்பி எம்.எஸ். பாஸ்கர் ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டும் அன்பும்.

வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றிருக்கும் தம்பி ஜி.வி. பிரகாஷ் குமார், உள்ளொழுக்கு மலையாளத் திரைப்படத்துக்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்ற தோழி ஊர்வசி, லிட்டில் விங்ஸ் ஆவணப்படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதைப் பெற்றிருக்கும் சரவணமுத்து செளந்தரபாண்டி மற்றும் மீனாட்சி சோமன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் உரித்தாகுக. இவ்வாறு தெரிவித்துள்ளார்...