தண்டவாளம் இருக்கு... போதிய ரயில்கள் இல்லை...

மதுரை: மதுரைக் கோட்டத்திற்குட்பட்ட மதுரை - போடி, மதுரை - கோவை வழித்தடங்களில் பகல் நேர ரயில்களின் குறைவால் பயணிகள் பஸ்களை நம்பியுள்ள நிலை உள்ளது.
மதுரை - போடி இடையே 2011ல் துவங்கிய அகல ரயில் பாதைபணிகள் நிறைவடைந்து, 2022 மே 27ல் மதுரை - தேனி இடையே ரயில் இயக்கப்பட்டது. 2023 ஜூன் 15ல் போடி ரயில்வே ஸ்டேஷன் பயன்பாட்டிற்கு வந்தது. மின்மயமாக்கல் பணிகள் முடிந்து இந்தாண்டு பிப்.,4 முதல் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது மதுரையில் இருந்து தினமும் காலை 8:20 மணிக்கு புறப்படும் 14 பெட்டிகள் கொண்ட பாசஞ்சர் (56701), காலை 10:20 மணிக்கு போடி செல்கிறது. மறுமார்க்கம் மாலை 6:00 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் (56702), இரவு 7:50 மணிக்கு மதுரை வருகிறது.வாரம் 3நாட்கள் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல் - போடி ரயில் (20601), காலை 6:40 மணிக்கு மதுரை வந்து 8:55 மணிக்கு போடி செல்கிறது. மறுமார்க்கம் ரயில் (20602), இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு 10:40 மணிக்கு மதுரை வந்து சென்னை செல்கிறது.
இவ்விரு ரயில்கள் தவிர, காலை 10:20 மணிக்கு பின் மாலை 6:00 மணி வரை, அவ்வழித்தடத்தில் வேறு ரயில்கள் இல்லை. போடி, தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் இருந்து கல்வி, வியாபாரம் நிமித்தமாக மதுரைக்கு வரும் பலர், காலையில் வருவதற்கும் மாலையில் ஊர் செல்வதற்கும் ரயில் இல்லாமல் பஸ்களை நம்பியுள்ளனர்.
அதுபோல், மதுரை - கோவை இடையே பழநி வழியாக ஒரு பாசஞ்சர் மட்டுமே இயங்கி வருகிறது. காலை 7:05 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் பாசஞ்சர் (16722), மதியம் 12:10 மணிக்கு கோவை செல்கிறது. மறுமார்க்கம் மதியம் 2:30 மணிக்கு புறப்படும் பாசஞ்சர் (16721), இரவு 7:35 மணிக்கு மதுரை வருகிறது.
80 கி.மீ., துாரம் கொண்ட திருநெல்வேலி - செங்கோட்டை, 61 கி.மீ., துாரம் கொண்ட திருநெல்வேலி - திருச்செந்துார் வழித்தடங்களில் இருமார்க்கங்களிலும் தினமும் தலா 12 பாசஞ்சர்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் 90 கி.மீ., துாரம் கொண்ட மதுரை - போடி, 229 கி.மீ., துாரம் கொண்ட மதுரை - கோவை (பழநி வழி) ஆகிய வழித்தடங்களில் இருமார்க்கங்களிலும் தலா இரு பாசஞ்சர் மட்டுமே இயங்கி வருகின்றன.
பயணிகள் கூறுகையில், காலை 7:15 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்டு 9:15 மணிக்கு மதுரை வரும் வகையிலும், மறுமார்க்கம் மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு இரவு 7:30 மணிக்கு போடி செல்லும் வகையிலும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். சென்னை சென்ட்ரல் - போடி ரயில்களை தினமும் இயக்க வேண்டும். மதுரை - கோவை வழித்தடத்தில், காலை 7:00 மணிக்குகோவையில் இருந்து புறப்பட்டு பழநி வழியாக மதியம் 12:05 மணிக்கு மதுரை வரும் வகையிலும், மறுமார்க்கம் மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு இரவு 7:50 மணிக்கு கோவை செல்லும் வகையிலும் கூடுதல் ரயில்களை இயக்கலாம்'' என்றனர்