சென்னை திருவொற்றியூர் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திற்கு எதிராக சாலைக்கு வந்த மக்கள்

சென்னை திருவொற்றியூர் பிரபல அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்திற்கு எதிராக சாலைக்கு வந்த மக்கள்
சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே

சென்னை: சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தனியார் நிறுவனம் சார்பில், 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தற்போது தாங்கள் பயன்படுத்தும் குழாயில் இணைப்பு கொடுத்தால் பள்ளமான பகுதியில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கும் என போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

சென்னையை பொறுத்தவரை ஒரு காலத்தில் பணக்காரர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி தனி வீடு கட்டி வசித்து வந்தார்கள். கோவை, மதுரை,திருச்சி போலவே சென்னை மாநகரமும் அதிகப்படியான தனி வீடுகளுடன் இப்போது இருப்பது போலவே இருந்தது. ஆனால் கடந்த 20 வருடங்களில் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. சென்னை மாநகருக்குள் ஒரு லட்சம் சம்பளம் வாங்குவோர் கூட தனி வீடு வாங்கிவிட முடியாத அளவிற்கு ரியல் எஸ்டேட் வளர்ந்து விட்டது

சென்னை ரியல் எஸ்டேட் வளர்ச்சி

சென்னை வேளச்சேரியில் அல்லது தாம்பரத்தில் 20 வருடம் முன்பு இடம் வாங்கி இருந்தால் தங்கத்தை விடவும் பல மடங்கு லாபம் கிடைத்திருக்கும். ஏன் சென்னையில் எந்த பகுதியிலும் 20 வருடம் முன்பு இடம் வாங்கியிருருந்தால் அல்லது 25 வருடம் முன்பு வாங்கி போட்டிருந்தால் பெரிய கோடீஸ்வரர்களாக வாழமுடியும். வேலைக்கே போகாமல் வாழ்நாள் முழுக்க வருமானத்தை அதுவே தந்திருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது

சென்னையில் அடுக்குமாடி வீடுகள்

கடந்த 15 வருடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து பகுதிகளிலும் அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை 1000 வீடுகள், 500 வீடுகள், 2000 வீடுகள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. சிறிய அடுக்குமாடி குடியிருப்புகளைவிட கேட்டேட் கம்யூனிட்டு எனப்படும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புகளே அதிக அளவில் கட்டப்படுகின்றன.அதைத்தான் மக்களும் இப்போது அதிகமாக விரும்புகிறார்கள்

திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம்

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில், 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்க பணிகளை தற்போது அடுக்குமாடி நிறுவனத்தார் தொடங்கியுள்ளனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், தற்போது தாங்கள் பயன்படுத்தும் குழாயில் இணைப்பு கொடுத்தால் பள்ளமான பகுதியில் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்கும் என தெரிவித்து திருவொற்றியூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாதாள சாக்கடை இணைப்பு

இதையடுத்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும், மெட்ரோ வாட்டர் அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், அடிக்குமாடி குடியிருப்பு நிர்வாகம் தனி குழாய் அமைத்து கழிவுநீரை பம்பிங் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், நிச்சயம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.