ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர், ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கியுள்ளார்.
தொழிலாளர்களுக்கு எதிரான மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று(ஜூலை 9) நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக மேற்குவங்கம், ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து சரிவர இயங்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எனினும் வேலைநிறுத்தப் போராட்டத்தை மீறி பல பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவ்வாறு இயங்கும் பேருந்துகள் வழிமறிக்கப்படுகின்றன.
இந்நிலையில் கேரளத்தில் பத்தினம்திட்டா பகுதியில் பாதுகாப்பு கருதி அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கியுள்ளார். அவரது விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதேபோல மேற்குவங்கத்திலும் சில ஓட்டுநர்கள் பாதுகாப்பு கருதி ஹெல்மெட் அணிந்து பேருந்தை இயக்கி வருகின்றனர்.