அடித்தது ஜாக்பாட்... அல்ல அல்ல குறையாமல் கிடைத்த செருப்பு கிளாத்தி மீன்..!!

அடித்தது ஜாக்பாட்... அல்ல அல்ல குறையாமல் கிடைத்த செருப்பு கிளாத்தி மீன்..!!
பாம்பன் மீனவர்களின் ஒவ்வொரு விசைப்படகுகளிலும் டன் கணக்கில் செருப்பு கிளாத்தி மீன் சிக்கி உரிய விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் நீண்ட கடற்கரையாக உடைய பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் உள்ளது. இங்குள்ள மன்னார் வளைகுடா கடலில் ஆயிரத்திற்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இதனால் இங்கு மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக உள்ளது..

இதில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் 90-க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்வளத்துறை அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர். இதில் ஒவ்வொரு படகிலும் ஒரு டன் கிலோக்கு மேல் செருப்பு கிளாத்தி என்று சொல்லக்கூடிய கிளாத்தி மீன் கிடைத்துள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

லெதர் ஜாக்கெட் ஃபிஷ் என்ற செருப்பு கிளாத்தி மீன் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இந்த வகை மீன் சீசன் இருக்கும். கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த மீனை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் சாப்பிடமாட்டார்கள். சீலா மற்றும் வாவல் மீன் சுவை இருப்பதால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள உணவகங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மேலும், கேரளாவில் அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் மீனாகும். இங்கிருந்து தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு, தூத்துக்குடியில் இதனை தோளை நீக்கி அங்கிருந்து துபாய் போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.