விவசாயிகளுக்கு கடன் வழங்க சிபில் ஸ்கோர் தேவையில்லை.. ஆனால் இது முக்கியம்.. கூட்டுறவு பதிவாளர் கடிதம்

விவசாயிகளுக்கு கடன் வழங்க சிபில் ஸ்கோர் தேவையில்லை.. ஆனால் இது முக்கியம்.. கூட்டுறவு பதிவாளர் கடிதம்
இது முக்கியம்.. கூட்டுறவு பதிவாளர் கடிதம்

சென்னை: வணிக வங்கிகளிடம் தடையில்லா சான்று பெற்று விவசாயிகளுக்கு கடன் வழங்கலாம் என்றும், சிபில் அறிக்கை தேவையில்லை என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளார். நடப்பாண்டில் வணிக வங்கிகளில் விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றுள்ளாரா என்பதை அறிய வேண்டும் என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில், பொதுத்துறை வங்கிகளில் பயிர்க் கடன் பெற பல்வேறு ஆவணங்களைச் சமர்ப்பித்து, கடன் தொகை வாங்கி வந்த விவசாயிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் உடனடியாக கடன் கிடைப்பபது இல்லையாம். இதனால் தனிநபர் மூலமாகவும், தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வாங்கி வருகின்றனர்.

பல்வேறு நிபந்தனைகள்

இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடன் பெற வேண்டுமென்றால், பல்வேறு புதிய நிபந்தனைகளை அரசு கொண்டு வந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். வங்கிக் கடன் தொகையை நம்பி விவசாயம் செய்யும் ஏராளமான விவசாயிகள், தாங்கள் புதிய விதிமுறைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று குமுறுகிறார்கள்

விவசாயிகள் எதிர்ப்பு

விவசாயம் செய்யும் பெரும்பாலானோர் நிறைய படித்தவர்கள் இல்லை. பள்ளி கல்வியை முடிக்காதவர்கள் பலர் விவசாயம் செய்கிறார்கள். எனவே சிபில் ஸ்கோர் தொடர்பான நடைமுறைகள் அறிந்து இருப்பது கடினம் என்றும் மேலும் விவசாயிகள் தங்களது கடனை தாமதமாகக் கட்டினால், அடுத்த முறை அவர் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சிபில் ஸ்கோர் நடைமுறையை கடுமையான எதிர்ப்பு உள்ளது. கூட்டுறவு வங்கிகள் தர மறுத்தால், விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளி இடங்கள், தனி நபர்கள், தனியார் நிதி நிறுவனங்களில் கடன்பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் தேவை என்ற நிபந்தனை உடனடியாக நீக்கி அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

கூட்டுறவுத் துறை அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறும் போது, "கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் தேவை என்ற நிபந்தனையை நடைமுறைப்படுத்த இதுவரை எந்த விதமான உத்தரவும் எங்களுக்கு வரவில்லை இது தொடர்பாக நாங்களும் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் குறித்து எதுவும் கேட்பதில்லை" என்று கூறினார்கள்.

சிபில் ஸ்கோர் தேவையில்லை

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறுகையில், "தொடக்க வேளாண்மை கூட்டுறவு மற்றும் இதர வணிக வங்கியிலும் முந்தைய ஆண்டுகளில் பயிர்க்கடன் பெற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு கடன் அட்டை வட்டி மானிய திட்டத்தின் கீழ் வட்டி மானியம் கிடைக்கப்பெறாமல் இருப்பது கண்டறியப்படும் பட்சத்தில், நடப்பாண்டில் அந்த விவசாயிகளுக்கு மட்டும் இதர வணிக வங்கிகளில் விவசாய கடன் அட்டை திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயிர்க்கடன் பெற்றுள்ளாரா? என்பதை சிபில் அறிக்கையினை பெற்று உறுதி செய்த பின்னர் பயிர்க்கடன் வழங்கிட தெரிவிக்கப்படுகிறது

தடையில்லா சான்று

இதர விவசாயிகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படி சம்பந்தப்பட்ட வணிக வங்கிகளிடம் இருந்து தடையில்லா சான்று மட்டும் பெற்றுக்கொண்டு பயிர்க்கடன் மற்றும் கால்நடை மூலதன கடன்கள் வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. அவர்களுக்கு சிபில் அறிக்கை தேவையில்லை.

கடன் பெறும் முறை

அதேபோன்று, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமானது, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்/தனியார் பால் நிறுவனம் மற்றும் கடன் பெறும் உறுப்பினர்களுடன் முக்கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமோ, தனியார் பால் நிறுவனமோ இல்லாதபட்சத்தில், அச்சங்கத்தின் செயலாளரே இல்லையென சான்றளித்து பின் கடன் வழங்க வேண்டும். ஆடு, கோழி மற்றும் மீன்வளர்ப்பு தொடர்பாக முக்கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள தேவையில்லை. கடன் மனுதாரர் மற்றும் சங்க செயலாளர் மட்டும் கால்நடைகளுடன் புகைப்படம் எடுத்து கடன் மனுவுடன் இணைக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தவும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.