சென்னை-போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்.. தேனி மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்

சென்னை-போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம்.. தேனி மாவட்ட மக்களுக்கு குட்நியூஸ்
தேனி மாவட்டம் போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில்

தேனி: தேனி மாவட்டம்

போடியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் செல்லும் பாதை முழுமையாக மின்மயமாக இருப்பதால் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வழக்கத்தைவிட 15 நிமிடம் முன்னதாக ரயில் போடிக்கு வந்துவிடுகிறது.

மதுரை-போடிநாயக்கனூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இதனை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது.இதற்காக 12 ஆண்டுகள் வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு பணிகள் தொடங்கின. பணிகள் எல்லாம் முடிந்து கடந்த 2022-ம் ஆண்டு மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை ஆரம்பித்து அதன் பிறகு போடி வரை பணிகள் நிறைவு பெற்றது. இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டு மதுரை-போடி இடையே பயணிகள் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

தொடர்ந்து மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை சென்று வந்த மதுரை அதிவிரைவு ரயில், போடிநாயக்கனூர் சென்னை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையமாக மாற்றப்பட்டது. மதுரை-போடி இடையே தினசரி ரயிலும், போடி-சென்னை இடையே வாரம் 3 நாட்கள் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் என்ஜின்கள் மூலம் இந்த ரயில்கள் கடந்த பிப்ரவரி மாதம் வரை இயக்கப்பட்டு வந்தன. அதாவது மதுரை வரை மின்சார ரயிலும், அதன்பிறகு டீசல் என்ஜினிலும் இயக்கப்பட்டு வந்தன.

இதனிடையே இந்த ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. மதுரையில் இருந்து போடி வரை மின்மயமாக்கல் பணி கடந்த ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ரயில் பாதையில் மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதன் தொடர்ச்சியாக அகல ரயில் பாதையில் மின்சார ரயில் சேவை பிப்ரவரி மாதம் முதல் போடி வரை மின்சார ரயிலாக வந்து செல்கிறது. இதேபோல் மதுரையில் இருந்து போடிக்கு வரும் தினசரி பயணிகள் ரயிலும், மின்சார என்ஜின் மூலம் வரத்தொடங்கியது. இந்த ரயில் பாதையில் மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டதால், பயண நேரம் குறைந்தது.

சென்னையில் இருந்து போடிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரை வரை வழக்கமான கால அட்டவணை படியே இயக்கப்பட்ட நிலையில், அதன்பிறகு மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு காலை 8 மணிக்கு செல்வதற்கு பதிலாக 7.54 மணிக்கும், ஆண்டிப்பட்டிக்கு காலை 8.20-க்கு செல்வதற்கு பதிலாக 8.13-க்கும், தேனிக்கு காலை 8.28-க்கு செல்வதற்கு பதிலாக 8.20-க்கும், போடிக்கு காலை 9.35-க்கு செல்வதற்குப் பதிலாக 9.10-க்கும் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது.

இதேபோல் மறுமார்க்கமாக போடியில் இருந்து இரவு 8.30-க்கு புறப்படுவதற்கு பதிலாக 8.50-க்கு ரயில் புறப்படும் என்றும், அதன்பிறகு தேனிக்கு இரவு 9.03-க்கும், ஆண்டிப்பட்டிக்கு 9.18-க்கும், மதுரைக்கு 10.40-க்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 11.42-க்கும் சென்றடையும் என்றும் திண்டுக்கல்லில் இருந்து வழக்கமான அட்டவணைப்படி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்றும் அறிவித்தது.

இதேபோல் மதுரை-போடி பயணிகள் ரெயிலை பொறுத்தவரையில், மதுரையில் இருந்து காலை 7.15-க்கு புறப்படுவதற்கு பதிலாக 8.20-க்கு புறப்பட்டு, காலை 10.20-க்கு போடி சென்றடையும். மறுமார்க்கமாக போடியில் இருந்து மாலை 5.50-க்கு புறப்படுவதற்கு பதிலாக 6 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இதன்படியே ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் சென்னை போடிநாயக்கனூர் ரயில் (20601) வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, போடிக்கு மறுநாள் காலை 9.10 மணிக்கு வந்த நிலையில், சென்னை-போடி எக்ஸ்பிரஸ் ரயில் போடிக்கு 15 நிமிடம் முன்னதாகவே வருகிறது. அதாவது போடிக்கு காலை 8.55 மணிக்கு வந்துவிடும். இன்று முதல் இந்த நேரம் மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது