கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.40 லட்சம் சிக்கியது: ஹவாலா பணமா என போலீஸார் விசாரணை

கோவை: கோவையிலிருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ.26.40 லட்சம் பணத்தை போலீஸார் இன்று (ஆக.2) காலையில் பிடித்தனர். அந்தப் பணம் ஹவாலா பணமா என இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் க.க.சாவடி போலீஸார், எட்டிமடை - சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில், எல்லை மாகாளியம்மன் கோயில் அருகேயுள்ள, காவல் சோதனைச் சாவடியில், இன்று (ஆக.2) காலை 8 மணியளவில், உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான க.க.சாவடி காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக கேரளா நோக்கி இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து தடுத்து நிறுத்தி போலீஸார் விசாரித்தனர். அவர்கள் கையில் ஒரு பேக்கை வைத்திருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது, இருவரும் முன்னுக்கு பின்னர் முரணான தகவல்களை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களது கைப்பையை போலீஸார் சோதனை செய்த போது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
அந்த பணத்துக்கான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. விசாரணையில் பிடிபட்டவர்கள் கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம்(49), அப்துல் ரகுமான்(38) ஆகியோர் எனத் தெரிந்தது. இவர்கள் ரூ.26 லட்சத்து 40 ஆயிரம் பணம், கவரிங் வளையல்கள் உள்ளிட்டவற்றை பையில் எடுத்துக் கொண்டு கேரளா சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
இந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை எனவும் தெரியவந்தது. இது கணக்கில் வராத ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து இருவரையும் பிடித்து க.க.சாவடி போலீஸார் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.