ஜீரோ பட்ஜெட்டில் மாடி தோட்டம்!! கத்தரிக்காய் முதல் டிராகன் ப்ரூட் வரை அறுவடையில் கலக்கும் சென்னை இல்லத்தரசி

ஒவ்வொரு காய்கறி, கீரை, பழ வகைகளிலும் மட்டுமே பத்துக்கு மேற்பட்ட வகைகள் இருப்பதாகவும், அந்த விதைகளை பகிர்வதன் மூலம் பலர் அறியாத மரபு ரகங்களை மீட்டுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மாடித்தோட்டம் - நகரங்களின் அசுர வளர்ச்சிக்குப் பின்பு தற்சார்பு விவசாயத்தை விரும்பும் பலருக்கு முன்நிற்கும் யோசனை மாடித்தோட்டம். மாடித்தோட்டம் என்றால் பேருக்கு ஒரு பூச்செடிகளையோ, அல்லது கொடிகளைப் படர விடுவதுமட்டுமின்றி, அன்றாடம் தேவைப்படும் உணவுக்கான உற்பத்திப் பொருட்களை விதைப்போட்டு, விளைய வைத்து பயன்பெறலாமென்ற ஒரு இல்லத்தரசியின் கதை..
2017-ல் மாடித்தோட்டம் குறித்த ஒரு WhatsApp குருப்பில் இணையும் லோக மேரி, அதில் சொல்லப்படும் தகவல்களைக் கொண்டு மாடித்தோட்டம் வைத்து, பின்னர் தான் கற்றுக்கொண்டதைச் சொல்ல தன்முனைப்பில் தொடங்கும் வாட்ஸ் அப் குழுவே 'சென்னை மாடித்தோட்டம்'. 7 வருடங்களில், பல்வேறு ஊர்களில் இருப்பவர்களை மாடித்தோட்டம் நோக்கி கொண்டு வந்து, தற்போது இக்குழுவில் 500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
வருடத்தில் இரண்டு முறை ஆடிப்பட்டம், தைப்பட்டம் என வகைப்படுத்தி விதை பகிர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பல ஊர்களில் இருந்தும் வரும் நபர்கள் கலந்துகொண்டு, தங்கள் மாடித்தோட்டத்தில் நன்கு விளைந்த செடிகளின் விதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு காய்கறி, கீரை, பழ வகைகளிலும் மட்டுமே பத்துக்கு மேற்பட்ட வகைகள் இருப்பதாகவும், அந்த விதைகளைப் பகிர்வதன் மூலம் பலர் அறியாத மரபு ரகங்களை மீட்டுக்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய லோக மேரி, "நமக்கான பொருளை நாமே விளைவிச்சு சாப்பிட்டால் எப்படி இருக்கும்?" என்று ஒரு யோசனை மூலமாக தான் இந்த மாடித்தோட்ட ஐடியாவே வந்துச்சு. மாடித்தோட்டம் குறித்து நிறைய தகவல்கள், நிறைய புத்தகங்கள், நிறைய பேருடைய அறிவுரைகள் கேட்டுதான் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிச்சேன்.
ஆரம்பிக்கும் போது பத்து பேர் தான் இருந்தாங்க; அதுக்கப்புறம் போக போக நிறைய பேர் வந்து சேர்ந்து, இப்ப 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்காங்க. ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும், விதைகள் அதிகமா வாங்கிட்டு போவாங்க. இப்ப வரைக்கும் ஒரு ரூபா கூட(தபால் செலவு தவிர்த்து) விதைகளுக்கு காசு வாங்கறது இல்ல. தமிழ்நாடு முழுக்க அனுப்பி வைக்கிறோம்.
வாடகை வீடோ, சொந்த வீடோ — ஒவ்வொருத்தரும் தங்க வசதிக்கேற்றாற்போல் செடிகளை வளர்க்கிறார்கள். தொடங்கும் போது, "இது இவ்வளவு பெரிய மாற்றமா உண்டாகும்?" நம்பல. ஆனா, இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க மாடித்தோட்டத்தின் குறித்த விழிப்புணர்வும், வழிகாட்டுதலும் இதன் மூலமா அதிகமாகி இருக்கு ஒவ்வொரு முறை சந்திக்கும் போது உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகமாவதே எங்களுக்கான மகிழ்ச்சியென நெகிழ்கிறார்.