சத்யஜித் ராய்யின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!

சத்யஜித் ராய்யின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை நிறுத்திய வங்கதேச அரசு!
சத்யஜித் ராய்யின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளதைப் பற்றி..

இயக்குநர் சத்யஜித் ராய்யின் மூதாதையர் வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது.

வங்கதேசத்தின் மைமென்சிங்கில் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், இந்திய சினிமாவுக்கு முகவரி கொடுத்தவர் என அறியப்படும் இலக்கியவாதியுமான சத்யஜித் ராய்யின் பூர்விக வீட்டை இடிக்கும் பணியை வங்கதேச அரசு நிறுத்தியுள்ளது. இந்த வீடு ரேயின் தாத்தாவும் புகழ்பெற்ற இலக்கியவாதியுமான உபேந்திர கிஷோர் ரே சௌத்ரிக்குச் சொந்தமானதாகும்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் மைமென்சிங் நகரில் இந்த வீடு அமைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்ட இந்த வீடு, தற்போது இடித்துவிட்டு மைமென்சிங் ஷிஷூ அகாதெமி கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுவந்தது.

பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து வீட்டை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வீட்டுக்கு சத்யஜித் ரேவோ அல்லது அவரது உறவினர்களோ உரிமையாளர்கள் இல்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மைமென்சிங் நகர துணை ஆணையர் முபிதுல் ஆலம் கூறுகையில், “இந்த வீட்டுக்கு சத்யஜித் ராய்யோ, அவரது குடும்பத்தினரோ உரிமையாளர்கள் கிடையாது. அவர்கள் யாரும் இந்த வீட்டில் வசிக்கவில்லை. அதிகாரபூர்வ ஆவணங்களின்படி, இந்த வீட்டு வங்கதேச அரசுக்குச் சொந்தமானது” என்றார்.

சத்யஜித் ராய்யின் பூர்விக வீடு இடிக்கப்படும் செய்தி வெளியான நிலையில், வங்காள எழுத்தாளர் சங்கம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் மேற்கு வங்க அரசும் இதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். மேலும், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்டோரும் கவலை தெரிவித்திருந்தனர்.

ஹரிகிஷோர் ரே சாலையில் உள்ள வீடு மைமென்சிங் ஷிஷு அகாடமியாகப் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அந்த வீடு 2007 முதல் பயன்படுத்தப்படாமல் இருந்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைவிடப்பட்ட வீட்டை இடித்துவிட்டு பல மாடி கட்டிடம் கட்டும் திட்டத்தை ஷிஷு அகாடமி தொடங்கியுள்ளது.

1989 ஆம் ஆண்டு அப்போதைய வங்கதேச ராணுவ ஆட்சியாளர் ஹுசைன் முகமது எர்ஷாத்தின் காலத்தில் ஷிஷு அகாடமி இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது